கொரோனா வைரஸ் எதிரொலி: மூடப்பட்ட தட்டச்சு பயிற்சி பள்ளிகள் - மாணவர்கள் ஏமாற்றம்
கொரோனா வைரஸ் காரணமாக தட்டச்சு பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் உள்ளனர்.
தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட தட்டச்சுப் பயிற்சி பள்ளிகள் உள்ளன. தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் இந்த பயிற்சி பள்ளிகள் முறையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அரசின் வழிகாட்டுதலோடு இயங்கி வருகிறது. இதில ஆயிரக்கணக்கான பயிற்சி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் முன்னுரிமை அடிப்படையில் தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டதால் வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள், பட்டதாரிகள், மாணவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே பணியில் உள்ளவர்களும் இந்த தட்டச்சு பயிற்சியை எதிர்கால நம்பிக்கையுடன் கற்று வந்தனர்.
இதேபோல் தட்டச்சுப் பயிற்சி பள்ளிகளில் சுருக்கெழுத்து பயிற்சிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட பயிற்சி பள்ளிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படும் ஆபீஸ் ஆட்டோமேஷன் என்ற பட்டய தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தட்டச்சு தேர்வுகள் நடந்து முடிந்து விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். ஏப்ரல் 15-ந் தேதிக்குள் முடிவுகள் வரும் என காத்திருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடும் பணியும் நிறுத்தப்பட்டது. ஒரு தட்டச்சு தேர்வு முடிந்து அதற்கு அடுத்த மாதத்திலிருந்து புதிய மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தாக்குதலால் மாணவ, மாணவிகள் நலன் கருதி மார்ச் 18-ந் தேதி தட்டச்சு பயிற்சி பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 50 நாட்களாக தட்டச்சு பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கிறது. வழக்கமாக பள்ளி நாட்களை விட கோடை விடுமுறை நாட்களில் பயனுள்ள வகையில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் தட்டச்சு பயிற்சிகளை பெறுவது வழக்கம். இவர்கள் ஆகஸ்டு மாதம் நடைபெறும் அரசு தேர்வில் கலந்து கொள்வார்கள்.
ஆனால் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் இன்றைக்கு மாணவர்கள் தட்டச்சு பயிற்சி பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். ஏற்கனவே பயிற்சி பெற்று வந்த மாணவர்களும், இளநிலை தேர்வை முடித்து. முதுநிலை தேர்வுக்காக பயிற்சி பெற காத்திருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காக பயிற்சி பெரும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தட்டச்சு பயிற்சி பெற முடியாமல் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டாலும், மாணவர்கள் ஆன்லைன் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலம் சில பாடங்களை கற்று வருகின்றனர். ஆனால் தட்டச்சு பொருத்தவரை நேரடி பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். எனவே இந்த பயிற்சி பெறுவது முற்றிலும் தடைபட்டு உள்ளது. அதேபோல் சுருக்கெழுத்து, கணினி ஆபீஸ் ஆட்டோமேஷன் போன்ற பயிற்சிகளும் நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது.
மார்ச் முதல் மாணவர் சேர்க்கையின்றி தட்டச்சு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஊழியர்களும், உரிமையாளர்களும் வருவாயின்றி பொருளாதார சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதே நேரத்தில் திட்டமிட்டபடி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
எனவே வரும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தட்டச்சு பயிற்சி பள்ளி உரிமையாளர்களும் அரசின் வழிகாட்டுதல்காக காத்திருக்கின்றனர்.
Related Tags :
Next Story