நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வெளுத்து கட்டிய மழை பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி


நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வெளுத்து கட்டிய மழை பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 May 2020 5:42 AM IST (Updated: 13 May 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டியது. இதனால் பொதுமக்கள்-விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகப்பட்டினம், 

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டியது. இதனால் பொதுமக்கள்-விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

கத்திரி வெயில்

நாகையில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், பகல் நேரங்களில் சுட்டெரித்த வெயிலால் வீட்டை விட்டு வெளியே வரவே பொதுமக்கள் தயக்கம் காட்டினர். இந்த வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இளநீர், கரும்பு ஜூஸ், தர்பூசணி ஆகியவற்றை வாங்கி பருகி வந்தனர்.

பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்ட அதே நேரத்தில் இரவிலோ புழுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து வந்தனர். அதிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தூங்க முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

வெளுத்து வாங்கிய மழை

இந்த நிலையில் நாகையில் நேற்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து குளிர்ந்த காற்றும் வீசத்தொடங்கியது. இதையடுத்து காலை 7.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்தில் லேசாக பெய்யத்தொடங்கிய மழை சில நிமிடங்களில் பலத்த மழையாக பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலை, கோட்டைவாசல்படி, பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீரில் வாகனங்கள் நீந்தியபடியே சென்றன. மேலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது.

பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

நாகையில் கத்திரிவெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று கொட்டிய மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், நாகூர், திட்டச்சேரி, திருமருகல், வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் அக்னி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. 2-வது நாளாக நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து குளிர்ந்த காற்று வீசியது. காலை 8.40 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை மதியம் 1 மணி வரை நீடித்தது.

இந்த மழையால் ஆறுகளிலும், குளங்களிலும், சாலைகளிலும், வயல்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கிய சில நாட்களிலேயே தொடர்ந்து மழை பெய்ததால் அக்னி நட்சத்திரம் முற்றிலும் முடங்கிப்போனது. அதேபோல் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கிய சில நாட்களிலேயே தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ஆண்டும் அக்னி நட்சத்திரம் முடங்குமா? என கூத்தாநல்லூர் பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சாலைகளில் தேங்கி நின்ற தண்ணீர்

இதேபோல் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையினால் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்னி நட்சத்திரத்தின்போது பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் மன்னார்குடி மற்றும் உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 1 மணிநேரம் நீடித்தது. அக்னி வெயில் காலத்தில் தொடர்ந்து பெய்த இந்த கோடை மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. திருமக்கோட்டை பகுதிகளில் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது.

Next Story