குமரியில் தொற்று கண்டறியப்பட்ட வக்கீல், கோர்ட்டு ஊழியருக்கு 2-வது பரிசோதனையில் கொரோனா இல்லை பெங்களூரு பெண்ணுக்கு உறுதியானது


குமரியில் தொற்று கண்டறியப்பட்ட வக்கீல், கோர்ட்டு ஊழியருக்கு 2-வது பரிசோதனையில் கொரோனா இல்லை பெங்களூரு பெண்ணுக்கு உறுதியானது
x
தினத்தந்தி 13 May 2020 12:51 AM GMT (Updated: 13 May 2020 12:51 AM GMT)

குமரியில் தொற்று கண்டறியப்பட்ட வக்கீல், கோர்ட்டு ஊழியருக்கு 2-வது பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவில் தெரிய வந்தது.

நாகர்கோவில், 

குமரியில் தொற்று கண்டறியப்பட்ட வக்கீல், கோர்ட்டு ஊழியருக்கு 2-வது பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவில் தெரிய வந்தது. பெங்களூரு வங்கி பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிப்பு எண்ணிக்கை

குமரி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. அவர்களில் 6 பேர் மட்டும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு பெண் சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரளாவைச் சேர்ந்த 5 வயது குழந்தை அந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களைத்தவிர முதலில் தொற்று கண்டறியப்பட்ட 16 பேரும் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இதற்கிடையே சென்னையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்று குமரி மாவட்டத்துக்கு ஆம்புலன்சில் திரும்பிய மயிலாடியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு மணி நேரம் மட்டுமே சிகிச்சை பெற்ற அவர் இறந்து விட்டார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டது. மேலும் குமரியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

முதல் பலி

இந்த நிலையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் மயிலாடி பகுதியைச் சேர்ந்த வக்கீல். இவர் கடந்த 50 நாட்களுக்கு முன் சென்னை சென்று திரும்பியவர். மற்றொருவர் ஆசாரிபள்ளத்தை அடுத்த பாம்பன்விளையைச் சேர்ந்த பெண். இவர் தஞ்சை மாவட்டத்தில் கோர்ட்டு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மீண்டும் வேலையில் சேர்வதற்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொரோனா பரிசோதனை சான்று பெற வந்தவர்.

மற்றொருவர் மார்த்தாண்டம் பனிச்சவிளை பகுதியைச் சேர்ந்த பெண். இவர் பெங்களூருவில் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். ஆரல்வாய்மொழி வழியாக வந்தபோது சோதனைச்சாவடி மூலம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இவருடன் வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இல்லை. எனவே இவருக்கு நேற்று இரவு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடைய வீட்டில் உள்ள தாயார், சகோதரி ஆகியோருக்கும் சளி மாதிரிகள் சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் குமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.

2 பேருக்கு பாதிப்பு இல்லை

மயிலாடியைச் சேர்ந்த வக்கீல், பாம்பன்விளையைச் சேர்ந்த கோர்ட்டு ஊழியர் ஆகியோருக்கு 2-வது பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், டாக்டர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டது. ஒருமுறை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, மறுபரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்தால் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்து பார்த்து அதிலும் தொற்று இல்லை என்பது தெரிய வந்தால்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நேற்று இரவு அவர்கள் 2 பேருக்கும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு இன்று (புதன்கிழமை)தெரிய வரும். அதிலும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story