ஊட்டி நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை


ஊட்டி நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2020 3:45 AM IST (Updated: 13 May 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி கோரிக்கை மனு அளிக்க ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியே செல்ல காரில் புறப்பட்டபோது, அவரை சந்தித்து மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 150 பேர், கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இந்த சூழ்நிலையிலும் கால்வாய்களை சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது போன்ற தூய்மை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். எங்களது பணியை பலர் கடவுள் போல கருதுகின்றனர். ஆனால், எங்களுக்கு வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைப்பது இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதச்சம்பளம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அப்போதைய கலெக்டர் அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் எங்களுக்கு தினக்கூலியாக ரூ.420 வழங்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதியம் வழங்காமல், ரூ.12 ஆயிரத்து 500 மட்டுமே வழங்குகின்றனர். இதுகுறித்து பலமுறை தனியார் நிறுவனத்திடம் கேட்டும் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

எனவே எங்களது குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்குவதோடு, மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 26-ந் தேதி ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story