ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு: ஊட்டியில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு


ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு: ஊட்டியில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 May 2020 3:30 AM IST (Updated: 13 May 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதால், ஊட்டியில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் மார்க்கெட்டுகள் மூடப்பட்டு, பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த திறந்தவெளி சந்தைகள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் 34 வகையான கடைகளை திறக்கலாம் என்று கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு செய்தது.

ஊட்டியில் நேற்று முன்தினம் அரசு அனுமதித்த கடைகளை வியாபாரிகள் திறந்தபோது, காலையிலும், மதியம் 2 மணிக்கு பின்னரும் போலீசார் அடைக்க கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்ததால், கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முதல் நீலகிரியில் 34 வகையான கடைகள் ஆங்காங்கே பல நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. ஊட்டியில் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிகளவில் வந்தனர். இரவு 7 மணி வரை கடைகள் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், காலையில் ஒரே நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், ஏ.டி.சி., மணிக் கூண்டு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் பலர் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்க சென்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவால் பல நாட்களாக வெறிச்சோடி இருந்த சாலைகளை வாகனங்கள் ஆக்கிரமித்து இருந்தது. ஊட்டி கமர்சியல் சாலையில் இருசக்கர வாகனங்களை முறையாக நிறுத்த தடுப்புகள் வைத்து கயிறு கட்டப்பட்டது. கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க நகராட்சி சார்பில் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊட்டியில் வழக்கம்போல் மக்கள் நடமாட்டம் இருந்தது. ஆனால் மக்களை விட வாகன போக்குவரத்து அதிகரித்து இருந்ததை காண முடிந்தது.

Next Story