40 நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடு நீக்கம்: தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் இயல்புநிலை திரும்பியது
40 நாட்களுக்கு பிறகு தடை விலக்கப்பட்டதால் தேங்காப்பட்டணம் பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர்.
புதுக்கடை,
40 நாட்களுக்கு பிறகு தடை விலக்கப்பட்டதால் தேங்காப்பட்டணம் பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர்.
தேங்காப்பட்டணம் தோப்பு
குமரி மாவட்டத்தில் முதன் முதலாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மூலமாக குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கி பழகியவர்கள் என 11 பேருக்கு தொற்று உருவானது. இதனையடுத்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தேங்காப்பட்டணம் தோப்பு, நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிகட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரம் ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. 40 நாட்களுக்கும் மேலாக அங்குள்ள மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. போலீசார், சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் அந்த பகுதி தொடர்ந்து இருந்தது.
இதற்கிடையே புதிதாக தொற்று உருவானதால் மாவட்டம் முழுவதும் 16 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பி னர். மேலும் அவர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.
தடை நீக்கம்
14 நாட்களாக புதிதாக தொற்று உருவாகாததாலும், தனிமைப்படுத்தலில் இருந்த நபர்களும் கொரோனாவில் இருந்து பூரணமாக குணமாகியதாலும் அங்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்தார். இதனால் நேற்று தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் இருந்து பெரியபள்ளி விளை வரை இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தெருக்களில் வைக்கப்பட்ட பேரிகார்டுகள் அகற்றப்பட்டன.
மேலும் அந்த பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு ஊரடங்குக்கு முந்தைய நிலையை போன்று, வழக்கம் போல் பரபரப்பாக இயங்கியது. வீடுகளிலேயே முடங்கி கிடந்த மக்கள் உற்சாகமாக வெளியே வந்தனர். அவர்கள் சாலைகளில் வாகனங்களில் சென்று சந்தோசமாக சுற்றியதை காணமுடிந்தது.
மகிழ்ச்சி
தடை செய்யப்பட்ட நேரத்தில், அங்குள்ள மக்கள் அரசு கொடுக்கும் காய்கறிகளை வைத்து உணவு தயார் செய்து சாப்பிட்டனர். தடையை விலக்கியதால், அந்த மக்கள் தாங்களாகவே கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீடுகளுக்கு சென்றனர். இந்த மாற்றம், எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story