புதுவையில் திடீர் மழை


புதுவையில் திடீர் மழை
x
தினத்தந்தி 13 May 2020 7:57 AM IST (Updated: 13 May 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி,

கோடை காலத்தின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் புதுவையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் கொடுமையாலும், தற்போது அமலில் உள்ள ஊரடங்காலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி புதுவையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது.

மக்கள் மகிழ்ச்சி

பகல் 11 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இந்த மழை சுமார் 20 நிமிடம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களில் சிலர் மழையில் நனைந்தபடியே சென்றதை காண முடிந்தது. சிலர் குடைகளை பிடித்த படியும், மழை கோட்டுகளை அணிந்தும் சென்றனர். புதுவையில் கத்திரி வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் நேற்று நகர பகுதியில் மின்தடை ஏற்பட்டது. எனவே வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி இருந்த மக்களுக்கு இந்த மழை குளிர்ச்சியாக இருந்தது. புதுவையின் புறநகர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காரைக்கால்

காரைக்காலில் காலை 10 மணி முதல் 11 மணி வரை இடியுடன் பலத்த மழை பெய்தது. காமராஜர் வீதி, பி.கே. சாலை, பாரதியார் வீதி உள்ளிட்ட வீதிகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. திடீர் மழை காரணமாக, மத்திய அரசின் இலவச பருப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது. மாதாந்திர முதியோர் பென்ஷன், மாத்திரை வாங்க வந்த பல முதியவர்கள், மழையில் நனைந்து பாதிக்கப்பட்டனர். திறந்தவெளி பகுதிக்கு மாற்றப்பட்ட நேரு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மழையினால் பாதிக்கப்பட்டனர்.

Next Story