பல்லாவரத்தில் 2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா


பல்லாவரத்தில் 2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 May 2020 10:30 PM GMT (Updated: 13 May 2020 9:48 PM GMT)

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 2 போலீஸ் காரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 23 வயது போலீஸ் காரர் ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. மதுரையை சேர்ந்த அவர், பல்லாவரத்தில் தங்கி, சென்னை மாநகர போலீசில் வேலை செய்து வந்தார். அதேபோல் பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்த 55 வயது பெண் போலீஸ் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரும் சென்னை மாநகர போலீசில் பணியாற்றி வருகிறார்.

ஜமீன் பல்லாவரத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரியின் 2 குழந்தைகளுக்கும் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நாகல்கேணியில் 27 வயது நபருக்கும், பம்மலில் 3 பேருக்கும், செம்பாக்கத்தில் ஒருவருக்கும், தாம்பரம் ரங்கநாதபுரத்தில் ஒரு சிறுவனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஊரப்பாக்கம்

ஊரப்பாக்கம் வள்ளியம்மை நகர் பகுதியில் 54 வயது சாலையோர காய்கறி வியாபாரி, தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கிவந்து ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை ஓரமாக விற்பனை செய்து வந்தார். அவருக்கு நடத்திய கொரோனா வைரஸ் பரிசோதனையில் நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதேபோல கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியில் வசிக்கும் 63 வயது முதியவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கோயம்பேட்டில் சொந்த வீடு உள்ளது. அங்கிருந்து அடிக்கடி காயரம்பேடு பகுதியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வரும் போது கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி கொண்டு வருவார். அப்படி இவர் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்ததால் இவருக்கு கொரோனா வைரஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பொத்தேரி

மேலும் பொத்தேரி பகுதியில் 65 வயது முதியவர் ஒருவருக்கும், வண்டலூரை அடுத்த ஊனைமாஞ்சேரி வசந்தாபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது மற்றும் 52 வயதுடைய 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 416 ஆனது. இவர்களில் 66 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story