கடலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 413 ஆக அதிகரிப்பு


கடலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 413 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 May 2020 3:45 AM IST (Updated: 14 May 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பின்னர் இந்த எண்ணிக்கை சற்று குறைந்த நிலையில் நேற்று முன்தினம் 14 போலீஸ்காரர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 49 வயது பெண் ஒருவரும் பலியானார்.

இந்த நிலையில் நேற்று கொரோனா அறிகுறி காணப்பட்ட 700 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 55 வயது நபர். இவர் சென்னை கோயம்பேடு சென்று வந்து தனிமைப்படுத்தப்பட்டவர் ஆவார். மற்றொருவர் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த 25 வயது வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.

413 ஆக உயர்வு

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ல் இருந்து 413 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி காணப்பட்டவர்கள் என மொத்தம் 311 பேர் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைகளிலும், சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 351 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 413 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் 7 ஆயிரத்து 826 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 112 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.


Next Story