சென்னையில் இருந்து 4 ரெயில்கள் மூலம் வடமாநில தொழிலாளர்கள் 2,301 பேர் சொந்த ஊர் பயணம்


சென்னையில் இருந்து 4 ரெயில்கள் மூலம் வடமாநில தொழிலாளர்கள் 2,301 பேர் சொந்த ஊர் பயணம்
x
தினத்தந்தி 14 May 2020 4:00 AM IST (Updated: 14 May 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 2,301 பேர் 4 சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

சென்னை, 

வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், இந்த வடமாநில தொழிலாளர்கள் தொழில்கள் இன்றி முடங்கினர். இதனையடுத்து ஏராளமானோர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில், சொந்த ஊர் செல்ல விரும்பும் வெளிமாநிலத்தினர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஆன்லைனில் பதிவு செய்தவர்களை சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதன் முதலாக காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட், பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

பீகார், அசாம், ஜார்கண்ட்

இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி முதல் கட்டமாக ஒடிசா மாநிலம் பூரிக்கு 1,038 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 10, 12-ந் தேதிகளில் மணிப்பூர், ஆந்திரா, மராட்டியம், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் அந்தந்த மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று 4-வது கட்டமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு பீகார் மாநிலம் பூர்னாவுக்கும், மாலை 4 மணிக்கு பீகார் மாநிலம் பரோனிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்களில் முறையே 1,092 மற்றும் 1,209 என மொத்தம் 2,301 தொழிலாளர்கள் பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, இரவு 9 மணிக்கு அசாம் மாநிலம் கவுகாத்திக்கும், இரவு 11 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்களில் சுமார் 1,200 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story