தனியார் நிறுவன ஊழியர் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலையா? போலீஸ் விசாரணை


தனியார் நிறுவன ஊழியர் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 13 May 2020 11:13 PM GMT (Updated: 13 May 2020 11:13 PM GMT)

வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் சாவில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வில்லியனூர்,

திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 41). தனியார் நிறுவன ஊழியர். கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் பகுதியில் கார் மோதிய விபத்தில் கந்தசாமி இறந்துபோனார். இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இதற்கிடையில் கந்தசாமியின் தாயார், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய கார் உரிமையாளர் பிரேம் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

கார் ஏற்றி கொலையா?

இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கார் உரிமையாளர் பிரேமுடன், மற்றொருவர் வந்ததும், அவர் கந்தசாமியின் நண்பர் ஸ்ரீதர் (40) என்பதும் தெரியவந்தது. மேலும் கந்தசாமிக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது.

எனவே கந்தசாமி சாவு, கொலையாக இருக்குமோ? என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே விபத்து வழக்கை, போக்குவரத்து போலீசார் வில்லியனூர் சட்டம் - ஒழுங்கு போலீஸ் நிலையத்துக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளனர்.

கந்தசாமி மனைவிக்கும், அவரது நண்பர் ஸ்ரீதருக்கும் பழக்கம் இருந்ததாகவும், கள்ளக்காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கந்தசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வில்லியனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story