வேகமாக வறண்டு வரும் பாகூர் ஏரி


வேகமாக வறண்டு வரும் பாகூர் ஏரி
x
தினத்தந்தி 14 May 2020 4:56 AM IST (Updated: 14 May 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

கோடை வெயில் கொளுத்தி வருவதால் பாகூர் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.

பாகூர்,

புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி உள்ளது. இது விவசாய பாசனத்துக்கு பயன்படுவதுடன் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது. 3.6 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏரியின் சுற்றளவு 8.30 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஏரியில் 193.46 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கிவைக்க முடியும்.

இதன் மூலம் பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 3,702 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

கடந்த ஆண்டு பருவமழையின்போது 143 செ.மீ. மழை பதிவானது. இந்த ஏரிக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து சொர்ணாவூர் அணைக்கட்டு வழியாக பங்காரு வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும். கடந்த ஆண்டு பெரிய அளவில் மழை பெய்யாததால் ஆற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் வாய்க் கால் மூலம் பாகூர் ஏரிக்கு நீர்வரத்து குறைவாக இருந்தது. சுமாராக பெய்த மழையால் ஏரியில் 2.7 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியது.

வறண்டு வருகிறது

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் ஆவியாகி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கோடை மழை பெய்தால்தான் ஏரியின் நீர்மட்டம் தற்போதுள்ள நிலையில் நீடிக்கும். இல்லையென்றால் ஏரியின் பெரும்பகுதி வறண்டு போகும் நிலை உள்ளது. இதனால் ஏரியில் உள்ள மீன்களை நம்பி, அங்குள்ள மரங்களில் கூடு கட்டி வசிக்கும் பறவைகள் இடம்பெயரும் நிலை உள்ளது.

இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அதிகளவில் மண் தேங்கியுள்ளது. எனவே தூர்வாரும் வகையில் இந்த ஏரியில் இருந்து மண்ணை எடுக்க அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story