வேலூரில் ஊரடங்கால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆட்டோ டிரைவர்கள்


வேலூரில் ஊரடங்கால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆட்டோ டிரைவர்கள்
x
தினத்தந்தி 14 May 2020 5:23 AM IST (Updated: 14 May 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் போக்குவரத்து முடங்கியதால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆட்டோ டிரைவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

வேலூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலாளர்களும், போக்குவரத்து இல்லாததால் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் வாடகைக்கார் டிரைவர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான அன்றாட தேவைகளை கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

வேலூர் மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 4 ஆயிரத்து 500 ஆட்டோக்கள் ஓடுகின்றன. மாவட்டத்தில் 10 சதவீத ஆட்டோ தொழிலாளர்கள் தான் முறைசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்டோக்களுக்கு மாநில முறைசாரா தொழிலாளர்கள் நலவாரிய நிதியில் இருந்து தலா ரூ.1000, நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பதிவு செய்யாத பெரும்பான்மையான ஆட்டோ தொழிலாளர்கள் அவற்றை பெற முடிவதில்லை.

இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், “அதிக ஆட்டோ தொழிலாளர்கள் கொண்ட மாநகரங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை வேலூர் பிடித்துள்ளது. இங்கு அதிக அளவில் நோயாளிகள், சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆட்டோக்களிலேயே பயணம் செய்கின்றனர்.

குறிப்பாக காட்பாடியில் இருந்து வேலூருக்கும், ஸ்ரீபுரத்துக்கும், பாகாயத்துக்கும் அதிக அளவில் ஆட்டோக்கள் இயங்கி வந்தன. ஊரடங்கால் வருவாய் இன்றி தவித்து வருகிறோம்.

தற்போது ஊரடங்கு தொடங்கி 50 நாளை நெருங்கும் நிலையில் வருமானம் இல்லாததால் குடும்ப தேவையை சமாளிக்க நகை உள்ளிட்டவைகளை தனியாரிடம் அடகு வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நாங்கள் பழைய நிலைக்கு மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகும். எனவே வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்த ஆட்டோ தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசின் நிவாரண தொகை மற்றும் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் 3 மாதத்துக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனர்.

Next Story