மாலத்தீவில் இருந்து மேலும் 32 பேர் குமரிக்கு வருகை தனிமை முகாமில் தங்க வைப்பு


மாலத்தீவில் இருந்து மேலும் 32 பேர் குமரிக்கு வருகை தனிமை முகாமில் தங்க வைப்பு
x
தினத்தந்தி 14 May 2020 7:04 AM IST (Updated: 14 May 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

மாலத்தீவில் இருந்து மேலும் 32 பேர் குமரிக்கு வந்தனர். அவர்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி, 

மாலத்தீவில் இருந்து மேலும் 32 பேர் குமரிக்கு வந்தனர். அவர்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

மாலத்தீவில் தவிப்பு

தமிழகத்தில் குமரி, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் பணி நிமித்தமாக மாலத்தீவில் தங்கி உள்ளனர். உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ், மாலத்தீவில் உள்ள தமிழர்களையும் விட்டு வைக்கவில்லை.

அங்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வேலையை இழந்ததோடு தமிழர்கள் உண்ண உணவின்றி பரிதவித்தனர். இதனை அறிந்த மத்திய, மாநில அரசுகள் மாலத்தீவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. அதாவது, மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

மேலும் 32 பேர் வருகை

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 147 பேர் குமரிக்கு வந்தனர். அந்த நபர்களிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பின்னர் கன்னியாகுமரி, களியக்காவிளை, கொல்லங்கோடு தங்கும் விடுதியில் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என தெரிந்ததும் அவர்கள் படிப்படியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் மாலத்தீவில் இருந்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 32 பேர் கப்பல் மூலம் கொச்சிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பஸ் மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டனர்.

முகாமில் தங்க வைப்பு

32 பேரிடமும் சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா முடிவில் தொற்று இல்லை என தெரியவந்த பிறகு அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுவரை கன்னியாகுமரி முகாமில் தங்குவார்கள். இதற்கிடையே, ஏற்கனவே மாலத்தீவில் இருந்து வந்து தனிமை முகாமில் இருந்த சிலருக்கு, கொரோனா தொற்று இல்லை என தெரிந்ததும் அவர்கள் தனி பஸ்சில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களை தங்க வைக்க மேலும் பல முகாம்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நாவல்காடில் உள்ள ஒரு கல்லூரியை முகாமாக மாற்றியுள்ளனர். மேலும், கன்னியாகுமரியில் உள்ள வேறு சில விடுதிகளையும் முகாமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story