விழுப்புரம் சிறுமி கொலையை கண்டித்து போராட்டம் அறிவிப்பு: மதுரை வக்கீல் நந்தினி, தந்தையுடன் கைது
சிறுமி படுகொலையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் அறிவித்த வக்கீல் நந்தினி, தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். அவருடைய மகள் வக்கீல் நந்தினி. இவர்கள் இருவரும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அப்போது வக்கீல் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் இனி டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று வலைத்தளங்களில் கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.
இந்தநிலையில் விழுப்புரத்தில் சிறுமி ஜெயஸ்ரீயை, அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் எரித்து கொலை செய்தனர். அவர்கள் இருவரையும் தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டு முன்பு நேற்று முதல் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நத்தினியும், அவருடைய தந்தையும் அறிவித்து இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதூர் போலீசார் நேற்று அதிகாலை 5 மணிக்கே அவர்களது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர்.
வக்கீல் நந்தினியும், அவரது தந்தையும் தூங்கி எழுந்து பார்த்தபோது தங்கள் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புதூர் போலீசார், ஊரடங்கு காலத்தில் தடையை மீறி நீங்கள் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளர்கள். எனவே உங்கள் இருவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வந்துள்ளோம்” என்று அவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் போலீசார் வக்கீல் நந்தினி, அவருடைய தந்தை ஆனந்தனை கைது செய்தனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து வக்கீல் நந்தினி கூறிய போது, “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்தது துயர சம்பவம் ஆகும். விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை குடிபோதையில் எரித்து கொலை செய்த அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேரை உடனே தூக்கில் போட வேண்டும். டாஸ்மாக்கை திறந்து கொலைகளையும், குற்றங்களையும் தூண்டக்கூடாது. டாஸ்மாக்கை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும். வீட்டுக்கே மது சப்ளை செய்யும் திட்டத்தையும் அரசு உடனே கைவிட வேண்டும். இதனை வலியுறுத்தி தான் நானும் எனது தந்தையும் ஐகோர்ட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க இருந்தோம். அதற்குள் எங்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டனர்” என்றார்.
Related Tags :
Next Story