பணிமனையில் நிறுத்தி வைத்திருந்தாலும் தொடர்ந்து பராமரிக்கப்படும் அரசு பஸ்கள் - அதிகாரிகள் தகவல்


பணிமனையில் நிறுத்தி வைத்திருந்தாலும் தொடர்ந்து பராமரிக்கப்படும் அரசு பஸ்கள் - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 14 May 2020 3:45 AM IST (Updated: 14 May 2020 9:23 AM IST)
t-max-icont-min-icon

பணிமனைகளில் நிறுத்தி வைத்திருந்தாலும், அரசு பஸ்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி,

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து அரசு பஸ்களும் போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டன.

ஊரடங்கு அமலில் இருப்பதால் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கி கிடக்கிறது. பஸ் நிலையங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி பணிமனையில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், பஸ்களின் டயர்களில் காற்று குறைந்து விடும். மேலும் பேட்டரிகளில் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விடும்.

இதுபோன்ற பிரச்சினைகளை சரி செய்யும் வகையில் தொடர்ந்து பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு வாரம் ஒரு முறை அனைத்து பஸ்களும் ஆய்வு செய்யப்படுகிறது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் இருந்து கோவை, பழனி, திருப்பூர், சேலம், திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதை தவிர அண்டை மாநிலமான கேரளாவுக்கும் பொள்ளாச்சியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும் 234 பஸ்கள் இயக்கப்படு கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து அனைத்து பஸ்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில் பஸ்களில் காற்று அழுத்தம் குறைவது, பேட்டரி கோளாறு போன்ற பிரச்சினைகளை சரிசெய்வதற்கு வாரத்திற்கு ஒரு முறை அரசு போக்குவரத்து கழக தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதை தவிர என்ஜின், ரேடியேட்டர் உள்ளிட்டவைகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த பணியில் பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எப்போது வேண்டுமானாலும் பஸ்களை இயக்க தயார் நிலையில் இருக்கிறோம். ஆனால் இதுவரைக்கும் பஸ்களை இயக்குவது தொடர்பாக அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அரசு அறிவிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story