ராமநாதபுரம் அருகே கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி மணல் திருடியவர் துப்பாக்கியுடன் கைது - தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு


ராமநாதபுரம் அருகே கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி மணல் திருடியவர் துப்பாக்கியுடன் கைது - தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 May 2020 3:45 AM IST (Updated: 14 May 2020 9:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி மணல் கடத்த முயன்ற சம்பவத்தில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மண்டபம் யூனியன் ஆற்றாங்கரை பகுதியில் உச்சிப்புளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஒரு கும்பல் மணல் திருடுவதற்காக பதுங்கி இருந்தவர்களை பிடிப்பதற்காக போலீசார் நெருங்கினர். அப்போது 3 பேர் போலீசாரை கண்டதும் வெளியில் வந்தனர்.

அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனாலும் போலீசார் அவர்களை மடக்கினர். அவர்களில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்த பீஸ்குட்டி என்ற முனியசாமி (வயது 42) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் நாட்டுத்துப்பாக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கியுடன் முனியசாமியை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் பிரேம்சந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கியை தவிர வேறு ஆயுதங்கள் அந்த கும்பலிடம் உள்ளதா? என்பது குறித்தும், தப்பியோடிய மற்ற இருவர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story