தர்மபுரி மாவட்டத்தில் கடைகளை திறக்க புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது


தர்மபுரி மாவட்டத்தில் கடைகளை திறக்க புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 14 May 2020 4:09 AM GMT (Updated: 14 May 2020 4:09 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கடைகளை திறப்பதற்கான புதிய விதிமுறைகள் நாளை (வெள்ளிக் கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கில் செய்யப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் கடைகள், நிறுவனங்களை திறக்க உரிய விதிமுறைகளின்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நாளை (வெள்ளிக்கிழமை) வரை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். இதன்படி நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் டீ கடைகள், பேக்கரிகள், உணவகங்களை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கலாம். இந்த கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.

பூக்கடைகள், மளிகை கடைகளை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கலாம். தர்மபுரி நகராட்சி பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி பெற்ற கடைகள், உழவர் சந்தை மூலம் அனுமதிக்கப்பட்ட நடமாடும் காய்கறி, பழக்கடைகள் செயல்படலாம். கிராமப்புற பகுதிகளில் காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள்

வீட்டு உபயோக எந்திரங்கள் விற்பனை செய்யும் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகை கடைகள், பெட்டி கடைகள், பர்னிச்சர் கடைகள், கூரியர், பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங், ஜெராக்ஸ் கடைகள், வாகன பழுதுநீக்கும் கடைகள், நாட்டு மருந்து கடைகள், வாகன உதிரிபாக கடைகள், நர்சரி கார்டன்கள், மரக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். சாலையோர தள்ளுவண்டி கடைகள், சிறிய ஜவுளி கடைகளுக்கு நகர்ப்புற பகுதிகளில் அனுமதி இல்லை. கிராமங்களில் இந்த கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

இதேபோல் கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் நகர்ப்புற பகுதிகளில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். கிராமப்புறங்களில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். செல்போன், கணினி, மோட்டார் எந்திரங்கள், மின்சாதன பொருட்கள், மிக்சி, கிரைண்டர், டி.வி, எலக்ட்ரிக்கல், கணினி, கண் கண்ணாடி விற்பனை, பழுதுநீக்கும் கடைகள் நகர்ப்புற பகுதிகளில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம். கிராமப்புற பகுதிகளில் தினமும் செயல் படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story