நாமக்கல் பணிமனைகளில் தயார் நிலையில் 450 அரசு பஸ்கள்


நாமக்கல் பணிமனைகளில் தயார் நிலையில் 450 அரசு பஸ்கள்
x
தினத்தந்தி 14 May 2020 4:54 AM GMT (Updated: 14 May 2020 4:54 AM GMT)

நாமக்கல் பணிமனைகளில் தயார் நிலையில் 450 அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

நாமக்கல்,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் பஸ், ரெயில் மற்றும் விமான சேவை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே 18-ந் தேதி முதல் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறை மேற்கொண்டு வருகிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனைகளிலும் ஒரே இடத்தில் 1½ மாதங்களுக்கு மேலாக பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், அவற்றை பராமரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்பட 5 பணிமனைகள் உள்ளன. இந்த 5 பணிமனைகளிலும் சுமார் 450 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 1,800 பேர் வரை பணியாற்றுகின்றனர்.

450 அரசு பஸ்கள்

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள அவர்கள் தங்களை எப்போது பணிக்கு அழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதற்கிடையே 18-ந் தேதி காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதால், தொழில்நுட்ப பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வந்து பஸ்களை தடையின்றி இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 பணிமனைகளிலும் நகர மற்றும் புறநகர் பஸ்கள் என சுமார் 450 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், எந்த நேரத்திலும் நிபந்தனைகளுடன் பஸ்களை இயக்கலாம் என்ற உத்தரவு வரும் என எதிர்பார்க்கிறோம். பஸ்கள் பழுதாகி விடக்கூடாது, அதன் இயக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதால் பழுதுகளை நீக்கி தயார் நிலையில் வைத்து உள்ளோம்.

பஸ்சில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். அவ்வாறு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணிகளை அனுமதித்தால் கட்டணத்தில் மாறுதல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பஸ்களை இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story