ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்படாததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் முடி திருத்தும் தொழிலாளர்கள்
ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்படாததால் முடி திருத்தும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
திருச்சி,
ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்படாததால் முடி திருத்தும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
ஊரடங்கில் இருந்து தளர்வு
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இருந்து 34 வகையான தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 11-ந்தேதியில் இருந்து பெட்டிக்கடைகள், டீக்கடைகள் உள்பட பல கடைகள் திறக்கப்பட்டு விட்டன.
ஆனால் முடி திருத்தும் சலூன் கடைகளுக்கு மட்டும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் முடி திருத்தும் தொழிலாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். முடி திருத்தும் கடைகளை வருகிற 17-ந்தேதிக்கு பின்னரும் திறக்க அனுமதிக்க வில்லை என்றால் 18-ந்தேதியில் இருந்து கடைகளை திறந்து வைக்க போவதாகவும் சலூன் கடைகள் சங்கத்தின் மாநில தலைமை அறிவித்து உள்ளது.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி முடிதிருத்தும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
வாழ்வாதாரம் இழந்து தவிப்பு
திருச்சி மாவட்ட மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் தருமலிங்கம்:-
திருச்சி நகரில் சுமார் 1000 முடி திருத்தும் தொழிலாளர்களும், மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர்.
50 நாட்களாக கடைகள் மூடப்பட்டு விட்டதால் வருமானம் இல்லாததோடு, வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகிறோம். கையில் இருந்த சேமிப்பு எல்லாம் சாப்பாட்டுக்கே சரியாகி விட்டது. வீட்டு வாடகை, கடை வாடகை, கடைக்கு மின்சார கட்டணம் கட்டுவதற்கு வழி இல்லை. வீடு , கடையை காலி செய்ய சொல்லி அவற்றின் உரிமையாளர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். இல்லம் தேடி சென்று முடி திருத்தும் தொழில் செய்த சுமார் 300 தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பாதி திறந்து வேலை பார்த்த பல கடைகளுக்கு ‘சீல்’ வைத்து உள்ளனர். நலவாரிய உதவி தொகையும் கிடைக்கவில்லை. 18-ந்தேதி முதல் எங்களை தொழில் செய்ய அனுமதிக்கவேண்டும். தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவேண்டும். அவற்றை சந்திக்க எங்களிடம் சக்தி இல்லை.
பெரம்பலூர்-அரியலூர்
தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம்- முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் பெரம்பலூர் நகர செந்தில்குமார்:-
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நாளில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 500 முடி திருத்தும் கடைகள் மூடப்பட்டு உள்ளன. கடைகள் திறக்கப்படாததால் முடி வெட்ட முடியாமல் ஆண்களும் தவித்து வருகின்றனர். இதனால் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் தற்போது வேலை ஏதும் இல்லாமல் இருப்பதால், அவர்களின் குடும்பங்கள் பசியாலும், பட்டினியாலும் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூரை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி:-
கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படுகிறதோ, இல்லையோ, பட்டினியால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை உருவாகும். தமிழக அரசுக்கு நலவாரியத்தில் பதிவு செய்துள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் அரசு வழங்கும் ரூ.1,000 போதுமானதாக இருக்காது. எனவே தமிழக அரசு முடி திருத்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என நிவாரணம் தொகை வழங்க வேண்டும். மேலும் முடி திருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு, வருகிற 18-ந் தேதி முதல் முடி திருத்தும் கடைகளை குறிப்பிட்ட நேரத்துக்காக திறக்க அரசு உத்தரவிட வேண்டும்.
கரூர்
குளித்தலையை சேர்ந்த சலூன் கடை தொழிலாளி செல்வகுமார்:-
தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சலூன் கடை உள்ளிட்ட சில கடைகள் மட்டும் திறக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இதனால் சலூன் கடை நடத்துபவர்கள், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆகியோரின் குடும்பத்தினருடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் சலூன் கடை நடத்துபவர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை
முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் கணபதி:-
புதுக்கோட்டை நகரப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் கடைகள் வரை உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டாக்டர்கள் சேவையாற்றி வருவதை போல நாங்களும் முடிதிருத்தும் பணியை மேற்கொள்கிறோம். டாக்டர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியாற்றுவதை போல நாங்களும் பணியாற்ற தகுந்த நடைமுறை ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். வருகிற 18-ந் தேதி முடி திருத்தும் கடைகளை திறக்க உள்ளோம். தகுந்த பாதுகாப்போடு முடி திருத்தும் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story