சேலம் மாநகரில், 62 நாட்களில் 9 லட்சம் லிட்டர் கிருமிநாசினி தெளிப்பு ஆணையாளர் சதீஷ் தகவல்


சேலம் மாநகரில், 62 நாட்களில் 9 லட்சம் லிட்டர் கிருமிநாசினி தெளிப்பு ஆணையாளர் சதீஷ் தகவல்
x
தினத்தந்தி 14 May 2020 10:44 AM IST (Updated: 14 May 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரில் கடந்த 62 நாட்களில் 9 லட்சம் லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை மண்டலம் 33, 34, 44 ஆகிய கோட்டங்களிலும் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலம் 46, 50, 58 ஆகிய கோட்டங்களிலும் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி முதல் நேற்று வரையிலான 62 நாட்களில் 30 ஆயிரம் கிலோ பிளச்சிங் பவுடர் மூலம் 9 லட்சம் லிட்டர் சோடியம் ஹைபோகுளோரைட் கிருமி நாசினி தயார் செய்யப்பட்டது. 68 கைத்தெளிப்பான்கள், 15 எந்திர தெளிப்பான்கள் மற்றும் 4 லாரிகள் மூலம் மாநகர் பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

காய்கறிகள் விற்பனை

மேலும் கடந்த மாதம் 3-ந் தேதி முதல் மாநகராட்சிக் குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் (கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உட்பட) 120 வாகனங்கள் மூலம் காய்கறிகள், மளிகை பொருட்கள் வீடு, வீடாக சென்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக 4 மண்டலங்களுக்குட்பட்ட 19 கோட்டங்களில் உள்ள 100 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் தினந்தோறும் 5 முறை கிருமி நாசினி மருந்து வாகனங்கள் மூலமாகவும், கைத்தெளிப்பான்கள் மூலமாகவும் தெளிக்கப்பட்டது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது கழிவறைகள் தினந்தோறும் 3 முறை சுத்தப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 12 ஆயிரத்து 475 குடியிருப்புகளுக்கு 3 ஆயிரத்து 118 கிலோ அளவிலான பிளச்சிங் பவுடர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான ஓமியோபதி மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story