வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பது எப்படி? பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 16-ந் தேதி பேச்சுப்போட்டி
திருச்சி சரகத்தில் கொரோனா ஊரடங்கு வேளையில் வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பது எப்படி? என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 16-ந் தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.
திருச்சி,
திருச்சி சரகத்தில் கொரோனா ஊரடங்கு வேளையில் வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பது எப்படி? என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 16-ந் தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.
பேச்சுப்போட்டி
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஊரடங்கு நேரத்தில் தங்களுடைய நேரத்தை எப்படி பயனுள்ள வழியில் செலவிடுகிறார்கள் என்பது சம்பந்தமாக பேச்சுப் போட்டி திருச்சி சரகத்தில் உள்ள ஒவ்வொரு உட்கோட்டங்களிலும் சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ‘ஜூம் குளொட்’(வெப் கான்பரன்சிங்) மூலம் நடத்தப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களுடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை அவரவர் மாவட்டத்தில் உள்ள கொரோனா காவல் சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தும் கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவி களுடைய பெயர் முகவரிகளை பதிவு செய்யக் கடைசி நாள் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணி வரை. போட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது.
என்ன தலைப்பு?
பேச்சுப்போட்டிக்கான தலைப்பு, ’கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவு நாட்களில் வீட்டில் இருக்கும் நேரத்தை எப்படி பயனுள்ளதாக கழிப்பது?’ என்பதாகும். போட்டியானது இளையோர் (ஜூனியர்), மூத்தவர் (சீனியர்) என்று 2 பிரிவுகளாக நடத்தப்படும். போட்டியானது ஜூம் குளொட் (வெப் கான்பரன்சிங்) நடத்தப்பட இருப்பதால் அதற்கு தேவையான உபகரணங்களை அவரவர் வீட்டில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட கொரோனா சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்தால், அவர்களுக்கு உரிய வசதி செய்து தரப்படும்.
5 நிமிடங்கள் மட்டுமே அனுமதி
பேச்சுப் போட்டிக்கான நேரம் 5 நிமிடங்கள் மட்டுமே. கலந்து கொள்ளும் மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஏதாவது ஒரு மொழியில் பேசலாம். ஜூம் குளொட் மூலமாக போட்டியில் ‘சைன் இன்’ ஆனவர்கள் போட்டியில் எல்லோரும் பேசி முடிக்கும் வரை தொடர்பில் இருக்க வேண்டும். உட்கோட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு அன்றைய தினமே மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ. 2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1000 மற்றும் 4-வது பரிசாக ரூ.500 வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த தகவலை திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story