அரவக்குறிச்சியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு சாலையில் அமர்ந்து போராட்டம்
அரவக்குறிச்சியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
அரவக்குறிச்சி மாரியம்மன் கோவிலின் பின்புறம் அம்மன் நகரில் சமுதாய கூடம் ஒன்று உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக, நேற்று அந்த சமுதாய கூடத்தை சுத்தப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அங்கு பரிசோதனை மையம் அமைப்பதற்காக, அந்த பகுதியில் உள்ள சாலையை மறித்து இரும்பு கம்பிகள், மரக்கட்டைகளை கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள், அந்த சமுதாய கூடத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கக்கூடாது என்று கூறி, சாலையில் அமைக்கப்பட்ட தடுப்பின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோய் பரவிவிடுமோ?
இங்கு பரிசோதனை மையம் அமைத்தால், எங்களுக்கும் நோய் பரவிவிடுமோ? என்று அச்சத்தில் உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story