கொரோனா தொற்று அதிகரிப்பு: மருத்துவ பரிசோதனையை பரவலாக்கி முடிவுகளை விரைவுபடுத்த வேண்டும் - மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை


கொரோனா தொற்று அதிகரிப்பு: மருத்துவ பரிசோதனையை பரவலாக்கி முடிவுகளை விரைவுபடுத்த வேண்டும் - மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2020 7:34 AM GMT (Updated: 14 May 2020 7:34 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரவலான மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்து முடிவுகளை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று கடந்த ஒரு வாரத்தில் வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் 44-ஐ எட்டி விட்டது. சுகாதாரத்துறையினர் நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ பரிசோதனை செய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்துவிட்டு வேறு இடங்களுக்கும் சென்று வரும் நிலையில் பாதிப்பு பரவலாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு அடைந்த தம்பதியினர் தங்களது சொந்த கிராமமான வேப்பிலைபட்டிக்கு வந்து விட்டு திருத்தங்கலுக்கும் சென்றுள்ளதால் 2 பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மாவட்ட நிர்வாகம் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் முறையாக கண்காணிக்கப்படாதநிலை நீடிக்கிறது. ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் விருதுநகருக்கு வந்த வாலிபர் ஒருவர் மாவட்ட எல்லையில் கண்காணிக்கப்படாத நிலையில் அவராகவே தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். சென்னையில் இருந்து விருதுநகருக்கு காரில் ஒரு முதியவர் வந்த நிலையில் கார் டிரைவரை மட்டும் மாவட்ட எல்லையில் சோதனையிட்ட சுகாதார அதிகாரிகள் காரில் இருந்த முதியவரை கண்டுகொள்ளவில்லை. தற்போது அவரது உறவினர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இம்மாதிரியான கண்காணிப்பு குறைபாட்டால் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.

சராசரியாக 200 மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில் மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் தெரிவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. நேற்று வரை 6,153 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், 244 பேரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. முடிவுகள் தெரிவதில் தாமதம் ஏற்படுவதால் அதில் நோய் தொற்று இருப்பவர்கள் யாராவது இருந்தால் நோய் பரவ கூடுதல் வாய்ப்பு ஏற்படும். மேலும் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்துறையினர் பரவலாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதில்லை. உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பணியாளர்கள், வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்துவதாக கூறப்பட்டாலும் இந்த விசாரணை முறையாக செய்யப்படாததால் உரிய பலன் கிடைப்பது இல்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் மருத்துவ பரிசோதனையை பரவலாக செய்து முடிவுகளை தாமதம் இன்றி வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட எல்லைகளில் வெளியூர்களில் இருந்து வருபவர்களை முறையாக கண்காணித்து அவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லைகளில் கண்காணித்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story