வெம்பக்கோட்டை பகுதியில், மூலப்பொருள் தட்டுப்பாட்டால் பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை
மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை திறக்கவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
ஊரடங்கால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலங்களில் இருந்து மே, ஜூன், ஜூலை மாதங்களிலேயே பட்டாசு உற்பத்தி செய்ய ஆர்டர்கள் வரும். இதையடுத்து பட்டாசு உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்படும். இந்த காலகட்டத்தின்போது ஊரடங்கு அமலில் இருந்தால் பட்டாசு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். இதன் காரணமாக பல்வேறு கட்ட கோரிக்கைகளை தொடர்ந்து தற்போது குறைந்த அளவிலான தொழிலாளர்களுடன் பட்டாசு ஆலை இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 200 பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளது. போக்குவரத்து முடங்கியுள்ளதால் மூலப்பொருட்கள் வாங்கி வரவும், தயார் செய்த பட்டாசுகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் முடியாத நிலை உள்ளது. இதனால் பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை தொடங்கவில்லை என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.
இதுகுறித்து தமிழன் பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் காத்தலிங்கம் கூறியதாவது:-
பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை தொடங்கும்போது 4 பேர் பணி செய்யும் ஒரு அறையில் ஒருவரை மட்டுமே பணி செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பட்டாசுக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் ஆலையில் உற்பத்தியை தொடங்கவில்லை. தற்போது இருப்பு உள்ள மூலப்பொருட்களை வைத்து 4 நாட்கள் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்ய முடியும். மேலும் பட்டாசு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே அரசு மூலப்பொருட்கள் கொண்டு வர போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவதோடு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story