தென்காசி அருகே, தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து தொடர் அட்டகாசம்


தென்காசி அருகே, தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து தொடர் அட்டகாசம்
x
தினத்தந்தி 15 May 2020 4:00 AM IST (Updated: 15 May 2020 12:34 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

தென்காசி, 

தென்காசி அருகே உள்ள வடகரையை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு அவர் தென்னை, மா, நெல் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகிறார். மேலும் ஏராளமான விவசாயிகளும் பல்வேறு பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவைகள் தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்கள், வாழை மரங்கள், நெற்பயிர்கள் போன்றவற்றை நாசப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு, விவசாயிகள் புகார் செய்வதும், வனத்துறையினர் யானைகளை விரட்டுவதும், மீண்டும் யானைகள் பயிர்களை அழிப்பதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வடகரையில் ராயர் காடு, குறவன் பாறை, மூன்று செல்லி, சென்னா பொத்தை ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து, தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி நாசப்படுத்தி வருகின்றன. நன்கு காய்த்து பறிக்கக்கூடிய சூழலிலுள்ள மா மரங்களை சாய்த்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம் ஜாகிர் உசேனுக்கு சொந்தமான தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளை யானைகள் சேதப்படுத்தி, உள்ளே புகுந்து அங்கு பயிரிட்டிருந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி நாசம் செய்தது. மா மரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story