அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு சீல் வைப்பு: கலெக்டர் கதிரவன் அதிரடி நடவடிக்கை


அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு சீல் வைப்பு: கலெக்டர் கதிரவன் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 May 2020 4:45 AM IST (Updated: 15 May 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகர் பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு சீல் வைத்து கலெக்டர் கதிரவன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் ஒரு நகைக்கடை, ஒரு பேக்கரி மற்றும் பெருந்துறை ரோட்டில் 2 துணிக்கடைகள், பார்க் ரோட்டில் ஒரு டீக்கடை ஆகியவை அரசின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு சீல் வைக்க கலெக்டர் சி.கதிரவன் அதிரடி உத்தரவிட்டார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக கலெக்டர் சி.கதிவரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு மாநகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன. கடந்த 31 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த 60 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் கடைகளை திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த நிபந்தனைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா?, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார். மீதமுள்ள 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 80 சதவீத தொழிற்சாலைகள் இயங்க தொடங்கி உள்ளன. இதில் 60 சதவீதம் பேர் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டால் தொழிற்சாலைகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும் இங்குள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் வெளிமாநில தொழிலாளர்களுடன் தொழிற்சாலை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 9 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டி விண்ணப்பித்து உள்ளனர். அவர்களது பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்கள் சிறப்பு ரெயில் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இன்னும் ஒருவாரம் ஆகும்.

வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வருபவர்கள் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது 1,067 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

வெளிமாநிலத்தை சேர்ந்த 474 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் 452 போருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 22 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. ஜவுளி சந்தை, மால்கள், ஸ்பா, தியேட்டர்கள், கிளப், நீச்சல்குளம் செயல்படுவது குறித்து அரசுதான் முடிவு செய்யும். ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் இதர வகை கடைகள் முறையாக அனுமதி பெறாமலும், அரசின் விதிமுறைகளை மீறி திறந்திருப்பதும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

இந்த ஆய்வின்போது அவருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story