நெல்லை-தூத்துக்குடியில் புதிதாக 18 பேருக்கு கொரோனா: தென்காசியில் சிறுவனுக்கு தொற்று உறுதி


நெல்லை-தூத்துக்குடியில் புதிதாக 18 பேருக்கு கொரோனா: தென்காசியில் சிறுவனுக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 May 2020 5:00 AM IST (Updated: 15 May 2020 2:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தென்காசியில் சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி வரை 63 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க போடப்பட்டிருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். அதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

அவ்வாறு நெல்லை மாவட்டத்துக்கு வருகிறவர்கள் பெரும்பாலும் தேசிய நாற்கர சாலையில் அமைந்துள்ள கங்கைகொண்டான் சோதனைச்சாவடியை கடந்துதான் நெல்லை மாவட்டத்துக்குள் நுழைய முடியும். அந்த சோதனைச்சாவடியில் போலீசார், மருத்துவக்குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு அந்த வழியாக வருகிறவர்கள் விவரங்களை சேகரித்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வருகிறார்கள்.

இவ்வாறு பரிசோதனை செய்தவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ராதாபுரம், பணகுடி பகுதிகளுக்கு சென்றிருந்தவர்களில் 11 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. இதேபோல் கத்தார் நாட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர்.

இதுதவிர நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் நேற்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 16 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இதில் 62 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். மீதி 51 பேர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கடையநல்லூர் தாலுகா பொய்கை கிராமத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணின் மகனுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

அவனுடன் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதி 20 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் இறந்து உள்ளார்.

இந்த நிலையில் மும்பையில் இருந்து கயத்தாறு பகுதிக்கு வந்த 2 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 10 பேரும், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story