ஊத்துக்கோட்டையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடுகள் எரிந்து நாசம்; 2 பேர் படுகாயம்
ஊத்துக்கோட்டையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இந்த சம்பவத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். ரூ.10 லட்சம் வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம் அடைந்தது.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டையில் உள்ள கிருஷ்ணா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 60). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் நவீன்குமார் (26). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து உள்ளார்.
மூர்த்தியின் அருகில் உள்ள வீடுகளில் விவேக் (45), வடிவேலு (40) ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் விவேக் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டிரைவராகவும், வடிவேலு தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை மூர்த்தி வீட்டில் டீ போடுவதற்காக கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்ததாக தெரிகிறது. கியாஸ் அடுப்பு சரியாக எரியாததால், பக்கத்து வீட்டில் வசிக்கும் சகாயம் (50) என்பவரை அழைத்து வந்து சிலிண்டரை சரி செய்தார். அப்போது கியாஸ் கசிந்ததில், சிலிண்டருக்குள் தீ பிடித்து கொண்டது. உடனே ஆபத்தை உணர்ந்த மூர்த்தி மற்றும் சகாயம் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டனர்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், மூர்த்தி, விவேக், வடிவேலு ஆகியோரின் வீடுகளில் தீப்பற்றிக்கொண்டது.
இதுகுறித்து தேர்வாய்கண்டிகையில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில், சகாயம், மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவி (65) என்ற மூதாட்டி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்த தீ விபத்தில் 4 வீடுகளிலிருந்த இருந்த டி.வி., பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story