வேலூரில் பரபரப்பு: சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கக்கோரி உத்தரபிரதேச தொழிலாளர்கள் போலீஸ் ஜீப்பை முற்றுகை


வேலூரில் பரபரப்பு: சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கக்கோரி உத்தரபிரதேச தொழிலாளர்கள் போலீஸ் ஜீப்பை முற்றுகை
x
தினத்தந்தி 15 May 2020 5:14 AM IST (Updated: 15 May 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கக்கோரி உத்தரபிரதேச தொழிலாளர்கள் வேலூரில் போலீஸ் ஜீப்பை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஏராளமான வடமாநிலத்தவர்கள் வந்துள்ளனர். குறிப்பாக ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இங்குள்ள கடைகள், நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் வேலை செய்து வருகின்றனர். மேலும் பலர் துணிவகைகள், விளையாட்டு பொருட்கள், பழங்கள் போன்றவற்றை பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று விற்பனை செய்து வந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு அமல்படுத்திய ஊரடங்கால் அவர்கள் அனைவரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழக அரசின் முயற்சியால் பல்வேறு கட்டங்களாக அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 5 கட்டங்களாக அவர்கள் காட்பாடியில் இருந்து ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். எனினும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலூரில் உள்ளனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது இன்ஸ்பெக்டரின் ஜீப்பை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போலீசார் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பின்னர் போலீசார் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களிடம் கூறுகையில், “மாவட்ட நிர்வாகம் உங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. உங்கள் மாநில அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்” என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொழிலாளர்கள் கூறுகையில், “எங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் எங்கள் தகவல்களை பதிவு செய்தது. எனினும் அதை முறையாக பதிவு செய்யவில்லை. எனவே முறையாக பதிவு செய்து சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story