விசைத்தறி தொழிலாளர்கள் உள்பட காய்கறி-பழ விவசாயிகளுக்கு ரூ.162 கோடி நிவாரணம் - மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
விசைத்தறி தொழிலாளர்கள் உள்பட காய்கறி, பழ விவசாயிகளுக்கு ரூ.162 கோடி நிவாரணம் வழங்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வேளாண்மை சந்தைகள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். பெங்களூரு வளர்ச்சி ஆணைய சட்டத்தில் திருத்தம் செய்துள்ளோம். நகர திட்டமிடல் சட்டத்திலும் திருத்தம் செய்துள்ளோம். இவற்றுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆசிரியர் பணி இடமாற்றம் குறித்த சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றினோம். இதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. மண்டலங்களை பிரித்து ஆசிரியர் பணி இடமாறுதல் மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்து நெரிசல்
ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், அதாவது பஸ் நிலையத்தை மங்களூருவில் அமைக்கிறோம். அங்கு 188 பஸ்களை நிறுத்த வசதி செய்கிறோம். அதில் வணிக வளாகம், பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்படும். அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும். இது அரசு-தனியார் பங்களிப்பில் ரூ.442 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
சமூக நலத்துறைக்கு ரூ.260 கோடி ஒதுக்கப்படுகிறது. விடுதிகளுக்கு தேவையான பால், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பெங்களூரு மாநகர நில போக்குவரத்து ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க முடிவு செய்துள்ளோம். 12 ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. அந்த பகுதிகளில் பஸ் போக்குவரத்துக்கு தனி பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரம் அந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மந்திரிசபை ஒப்புதல்
துங்கபத்ரா ஆற்றில் ஒரு தடுப்பணை கட்ட ரூ.14 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு திட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு கவர்னருக்கு இதை அனுப்பினோம். அதற்கு மந்திரிசபையின் ஒப்புதல் தேவை என்று கவர்னர் கூறினார். அதனால் இன்று (அதாவது நேற்று) மந்திரிசபையில் அதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறோம். மத்திய அரசின் சட்டத்தின் அடிப்படையில் இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி விவசாயிகள் வேளாண்மை சந்தைக்கு வெளியிலும் பொருட்களை விற்பனை செய்துகொள்ள முடியும். இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம். விவசாயிகளின் நலனுக்காக இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசுக்கு வந்த சந்தை வரி வருவாய் குறையும்.
வீடுகள் கட்டியுள்ளனர்
பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் லே-அவுட்டுகளில் 6 ஆயிரம் ஏக்கரில் 75 ஆயிரம் வீட்டு மனைகளில் சட்டவிரோதமாக வீடுகள் கட்டியுள்ளனர். அதை முறைப்படுத்த, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வீடுகள் கட்டி 12 ஆண்டுகள் ஆனவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். அவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
கொரோனா ஊரடங்கால் காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 92 ஆயிரம் எக்டேர் பரப்புக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.
ரூ.162 கோடி
மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. விசைத்தறி கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு முறை நிவாரணமாக ரூ.2,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.25 கோடி ஆகும். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.162 கோடி நிதிச்சுமை ஏற்படும்.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.
Related Tags :
Next Story