விருத்தாசலம் பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 198 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு


விருத்தாசலம் பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 198 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 15 May 2020 6:16 AM IST (Updated: 15 May 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 198 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே தொழுதூரில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் வகையில் தற்காலிக சிறப்பு மையமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 1-ந் தேதிக்கு பிறகு சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமநத்தம் பகுதிக்கு வந்த 270 பேர், அந்த மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 70-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

14 நாட்கள்

மீதமுள்ளவர்கள் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் தனிமைப்படுத்தும் மையத்தில் உள்ள யாருக்காவது கொரோனா அறிகுறி உள்ளதா? என அங்கிருந்த மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வியிடம், கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது மருத்துவ அலுவலர் கலைச்செல்வி, யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்றதும், 14 நாட்களாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க கலெக்டர் அன்புசெல்வன் முடிவு செய்தார்.

வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

அதன்படி 14 நாட்கள் முடிந்த 162 பேருக்கு கலெக்டர் அன்புசெல்வன் பல்வேறு அறிவுரைகள் கூறி நீங்கள் உங்கள் வீடுகளிலேயே மேற்கொண்டு 14 நாட்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். பின்னர் அவர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் 2 பஸ்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது திட்டக்குடி தாசில்தார்கள் செந்தில்வேல், ரவிச்சந்திரன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், விஜயா, கிராம நிர்வாக அலுவலர் ராசு, தொழுதூர் ஊராட்சி தலைவர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். தற்போது தொழுதூர் கல்லூரியில் 14 பேர் உள்ளனர். அவர்கள் வந்து 12 நாட்கள் மட்டுமே ஆவதால், இன்னும் 4 நாட்களுக்கு பிறகு அவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விருத்தாசலம்

இதேபோல் வேப்பூர் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 10 பேரும், விருத்தாசலம் கல்லூரி மாணவர் விடுதிகளில் இருந்த 26 பேரும் நேற்று தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள், 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story