மகனும், மருமகளும் வீட்டை விட்டு துரத்தியதாக புகார்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
மகனும், மருமகளும் வீட்டை விட்டு துரத்தியதால் மூதாட்டி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்,
மகனும், மருமகளும் வீட்டை விட்டு துரத்தியதால் மூதாட்டி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.
தீக்குளிக்க முயற்சி
பூதப்பாண்டி இறச்சகுளம் அருள்ஞான புரத்தை சேர்ந்தவர் கிரேஸ் மீரா (வயது 70). இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் கையில் மனுவும், ஒரு பையும் வைத்திருந்தார். முதலில் அவரை பார்த்தபோது மனு அளிக்க வந்தவர் போல இருந்தது.
திடீரென கிரேஸ் மீரா தான் பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மனு
போலீசார் ஓடிவந்து கிரேஸ் மீரா கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். அதன் பிறகு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கிரேஸ் மீரா தீக்குளிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கிரேஸ் மீரா ஒரு மனுவை போலீசாரிடம் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நான் கூலி வேலை செய்து வருகிறேன். என் கணவர் இறந்து விட்டார். எனக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தற்போது நான் என் கணவரின் குடும்ப சொத்தில் வீடு கட்டி வசித்து வருகிறேன். என்னுடன், என்னுடைய 4-வது மகன், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில் என் மகனும், மருமகளும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக என்னை அடிப்பது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சாப்பாடு தராமல் பட்டினி போடுகிறார்கள். என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி கதவை அடைத்துக் கொள்கிறார்கள். இதனால் மனவேதனை அடைந்த நான் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் என் மகன் மீது 4 முறை புகார் அளித்தேன்.
ஆனால் என் மகன் போலீஸ் நிலையம் வந்து புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுத்து விடுகிறார். அத்துடன் என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்கள். எனவே நான் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டேன். இந்த நிலையில் நான் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெறும்படி போலீஸ் அதிகாரி ஒருவர் என்னை மிரட்டினார். எனவே என்னை அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்த என் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பரபரப்பு
இதனையடுத்து அவரை போலீசார் சமாதானப்படுத்தி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசுமருத்துவக்கல்லூரி ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story