சென்னையில் இருந்து குமரி வந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு
சென்னையில் இருந்து குமரி வந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்,
சென்னையில் இருந்து குமரி வந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ்
குமரி மாவட்டத்தில் முதலில் 16 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்பிறகு நோய் பாதிப்பு ஏற்பட்ட 7 பேர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோக ஒருவர் கடலூரிலும், ஒருவர் சென்னையிலும் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் முதலில் பலியாகிய மயிலாடியை சேர்ந்த 65 வயது முதியவரின் மகளுக்கும், சென்னையில் இருந்து ஆளூர் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. அவர்கள் 5 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஒரு பெண்
இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. 35 வயதான அந்த பெண் குழித்துறையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து கடந்த 12-ந் தேதி கணவருடன் குமரி மாவட்டத்திற்கு வந்தார். அவர்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு சளி மற்றும் ரத்தம் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அப்போது அந்தப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவருடைய கணவருக்கு நோய் பாதிப்பு இல்லை.
32 ஆக உயர்வு
எனினும் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதோடு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தொற்று ஏற்பட்ட அந்த பெண்ணையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தனிமைப்படுத்தும் இடங்கள்
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை ஆகிய சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 6 தனிமைப்படுத்தும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது களியக்காவிளை சோதனை சாவடி வழியாக வருபவர்கள் களியக்காவிளையில் உள்ள ஒரு லாட்ஜிலும், கொல்லங்கோட்டில் உள்ள ஒரு மண்டபத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
தடை செய்யப்பட்ட பகுதியாக...
இதே போல ஆரல்வாய்மொழி சோதனை சாவடி வழியாக வருபவர்கள் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜிலும், நாவல்காடு, குமாரபுரம் ரோடு மற்றும் முப்பந்தல் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்த நடவடிக்கையின் மூலமாக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு நோய் பாதிப்பு இருந்தால் அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வது முன்கூட்டியே தடுக்கப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story