கேரளாவில் இருந்து மைசூருக்கு அனுமதியின்றி லாரியில் செல்ல முயன்ற 72 தொழிலாளர்கள் கூடலூரில் பிடிபட்டனர்
கேரளாவில் இருந்து மைசூருக்கு அனுமதியின்றி லாரியில் செல்ல முயன்ற 72 தொழிலாளர்கள் கூடலூரில் பிடிபட்டனர்.
கூடலூர்,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும்படி அந்தந்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு இ-பாஸ் வழங்கி அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல கூடலூர் வழியாக சரக்கு லாரி ஒன்று வந்தது. நீலகிரி-கர்நாடகா எல்லையான கக்கநல்லாவில் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரிக்குள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 72 தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டிரைவர் அஸ்லம் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா செல்ல நடந்து வந்த தொழிலாளர்களை சாலக்குடி என்ற இடத்தில் தனது லாரியில் ஏற்றி வந்ததாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்சிங் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தொழிலாளர்கள் கூறியதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் புல்லந்திசாஹர் மாவட்டத்தில் இருந்து கம்பளி போர்வை விற்பனை செய்ய கேரளாவுக்கு வந்தோம். ஊரடங்கால் வியாபாரம் பாதித்து, வருமானமின்றி தவித்தோம். ஆலப்புழையில் ஒரே அறையில் அனைவரும் தங்கியிருந்தோம். பின்னர் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து, அங்கிருந்து நேற்று முன்தினம் 45 கிலோ மீட்டர் தூரம் ரெயில் தண்டவாளம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி வழியாக சாலக்குடிக்கு நடந்து வந்தோம். அந்த வழியாக வந்த லாரி டிரைவரிடம் எங்கள் நிலையை எடுத்து கூறினோம். அவரது உதவியால், லாரியில் ஏறி மைசூரு வரை செல்ல முடிவு செய்தோம். கேரள அரசிடம் இ-பாஸ் கிடைக்கவில்லை. எனவே எங்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆனால் அதிகாரிகள் அவர்களை செல்ல அனுமதிக்கவில்லை. உடனே கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் தொழிலாளர்களை பாதுகாப்பாக அனுப்பி வைப்பது குறித்து கேரள, கர்நாடக மாநில அரசுகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கர்நாடகாவுக்குள் அனுமதிக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து 2 பஸ்கள் வரவழைக்கப்பட்டன. அதில் தொழிலாளர்கள் அனைவரையும் ஏற்றி, தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப்பள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இ-பாஸ் வழங்கி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கேரள அதிகாரிகள் கூறியதால், எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்துக்கு தொழிலாளர்கள் பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில் ஊரடங்கை மீறி அனுமதியின்றி தொழிலாளர்களை லாரியில் ஏற்றி வந்ததாக அரியானாவை சேர்ந்த டிரைவர் அஸ்லம் மீது மசினகுடி போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story