இனியும் ஊரடங்கு நீடிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


இனியும் ஊரடங்கு நீடிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 15 May 2020 7:41 AM IST (Updated: 15 May 2020 7:41 AM IST)
t-max-icont-min-icon

இனியும் ஊரடங்கு காலக்கெடு நீடிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

காரைக்கால் பகுதியில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது உமிழ்நீர் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆரஞ்சு மண்டலமாக இருந்த காரைக்கால் தற்போது பச்சை மண்டலமாக மாறியுள்ளது. புதுவையில் தற்போது 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 3 பகுதிகளும் பச்சை மண்டலமாக உள்ளன. காரைக்கால் பகுதியை சேர்ந்தவருக்கு இன்னொரு முறை பரிசோதனை செய்யப்படும். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்.

நாட்டில் பொருளாதாரத்தை சரி செய்ய பல துறைகளுக்கு ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். நாட்டில் உள்ள சிறு தொழில் தொழில் நடத்துபவர்களுக்கு வங்கிகள் மூலமாக வட்டியை குறைத்து எந்தவித பிணையும் இல்லாமல் ரூ. 3 லட்சம் கோடி கடன் கொடுப்பது, பழைய கடனை திருப்பி செலுத்த காலக்கெடு வழங்குவது உள்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை.

ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாது

மாநிலங்கள் நிதி ஆதாரம் இல்லாமல் தற்போது தவித்துக் கொண்டு இருக்கிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வருமான இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஊரடங்கு உத்தரவிட்டது பிரதமர் தான். அதனை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தி உள்ளோம்.

எனவே மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்போது அதனை ஈடுகட்ட மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவி செய்யாவிட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் உள்பட மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற சிரமம் ஏற்படும்.

ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் திட்டங்கள் அறிவித்தால் பணப்புழக்கம் இருக்கும். பொருட்களை வாங்கும் சக்தி அவர்களிடம் வரும். கடனைக் கொடுத்து அதனை திருப்பி பெறுவது தற்போது உள்ள சூழ்நிலையில் சரியான அணுகுமுறையாக இருக்காது.

மக்கள் ஏற்க மாட்டார்கள்

வருகிற 17-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டுமா இல்லையா? என்பது குறித்து பிரதமர் மாநிலங்களின் ஆலோசனையை கேட்டுள்ளார். அதற்கான பதிலை அனுப்புவதற்கு தேவையான கோப்புகளை தயார் செய்து வருகிறோம். குறுகிய கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று பிரதமரின் பேச்சில் தெரிகிறது.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவை அதிக காலம் நடைமுறைப்படுத்தி இயல்பு வாழ்க்கையை தடுத்து நிறுத்துவது என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஊரடங்கு உத்தரவை தளர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது எங்கள் பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அனுப்புவோம்.

வியாபாரிகள் பலர் என்னை சந்தித்து 17-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பிரதமரின் கருத்தை அறிந்து எங்களது அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம்.

பட்ஜெட் கூட்டத்தொடர்

மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி நாம் செயல்பட்டால் புதுவை மாநிலத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று பிரதமரிடம் காணொலி காட்சி மூலம் நான் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளேன்.

மத்திய அரசின் நிதியை பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரியுடன் தொலைபேசியில் நான் பேசியுள்ளேன். நமது மாநிலத்திற்கு பட்ஜெட் போடுவதற்கான காலம் இது. 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும். மக்கள் நல்வாழ்வு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதற்கான பணிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story