இலவச பொருட்கள் வழங்குவதில் முறைகேடு: ரேஷன் கடை ஊழியர்கள் 10 பேருக்கு அபராதம் - மாவட்ட அதிகாரி நடவடிக்கை


இலவச பொருட்கள் வழங்குவதில் முறைகேடு: ரேஷன் கடை ஊழியர்கள் 10 பேருக்கு அபராதம் - மாவட்ட அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 May 2020 3:45 AM IST (Updated: 15 May 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கிய உணவு பொருட்களில் முறைகேடு செய்த ஊழியர்கள் 10 பேருக்கு மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி அபராதம் விதித்தார்.

கோவை,

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையில் உள்ள சில ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய அத்தியாவசிய பொருட்களை அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கியதாகவும், இது தவிர கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கியதுபோல் கணக்கு காட்டி வழங்காமல் முறைகேடு செய்வதாகவும் இதனால் அரிசி உள்ளிட்ட பொருட்களை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்புச் செயலாளர் லோகு மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரி, கூட்டுறவு துணைப்பதிவாளர் ஆகியோருக்கு கடை எண்களுடன் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாவட்ட வழங்கல் குமரேசன் பீளமேட்டை அடுத்த ஹோப் காலேஜ் தாஷ்கண்ட் வீதியிலுள்ள 2 ரேஷன் கடைகள், காந்திமாநகர், காளப்பட்டி பகுதி, சாமிசெட்டிபாளையம், கோவை வடக்கு பகுதி, மற்றும் சித்தாபுதூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நேரில் ஆய்வு செய்து இருப்பு கணக்கை கேட்டறிந்தார்.

அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள் வழங்காமல் இருப்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட உணவு வழங்கல் பிரிவு அதிகாரி குமரேசன் கூறியதாவது:-

கோவையில் உள்ள 10 ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கவேண்டிய உணவு பொருட்களில் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இருப்புக்கு தகுந்தவாறு ரேஷன் கடை ஊழியர்கள் 10 பேருக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்ந்தால் இடமாற்றம், தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story