கோவை மாநகர பகுதியில் 3,601 பேருக்கு கொரோனா பரிசோதனை - அதிகாரிகள் தகவல்
கோவை மாநகர பகுதியில் 3,601 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாநகர பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர்கள் அனைவரும் குணமாகி வீடு திரும்பி விட்டனர். இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கோவை திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகர பகுதியில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் இருந்த பகுதிகளான 30 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடந்து வந்தது. அத்துடன் அந்தப்பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர தூய்மை பணியாளர்கள் , அம்மா உணவகத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் என்று பலருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று கோவை மணியக்காரபாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதுபோன்று அந்தப்பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் அம்மா உணவகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை 3,601 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதுதவிர தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் சென்று வந்த டாக்டர்கள், செவிலியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார் என்று அனைவருக்குமே பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனை இன்னும் தொ டர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story