கரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா
கரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை செவிலியர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து வந்த 2 பேருக்கும், மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த பள்ளபட்டியை சேர்ந்த 8 பேருக்கும், கரூர் உழைப்பாளி நகரை சேர்ந்த கர்ப்பிணிக்கும், குஜராத்தில் இருந்து வந்த தேவர் மலையை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த குளித்தலையை சேர்ந்த 55 வயது தொழிலாளி ஒருவருக்கும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பணிபுரியும் தாந்தோணிமலை என்.ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்த 38 வயது செவிலியர் ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தடை செய்யப்பட்ட பகுதி
செவிலியருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், அவருடன் பணிபுரிந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அவர் வசித்த குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர்கள் என மொத்தம் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் செவிலியர் வசித்த என்.ஜி.ஓ. நகர் பகுதிக்கு செல்லும் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story