தொழிற்சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி 8 மணி நேர பணி நேரத்தை 12 மணி நேரமாக நீடிப்பதை கைவிட வேண்டும்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் ஆட்குறைப்பு, சம்பளம் குறைப்பு போன்றவற்றை கைவிட்டு கொரோனாவிற்கு முந்தைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தலைவர் அகஸ்டின் தலைமையில், சங்கத்தினர் நேற்று காலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒன்று கூடினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் ஏதுவும் நடத்தக்கூடாது என்றும், மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போலீசார் எச்சரித்தனர். அதனை தொடர்ந்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கலைந்து சென்று, தங்களது வீடுகளில் முன்பு கோரிக்கைகளை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story