கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி கிடக்கும் திரையரங்குகள் - வேலை இழந்து வறுமையில் வாடும் தொழிலாளர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அவை வெறிச்சோடி கிடக்கின்றன. அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் வாடுகின்றனர்.
கோவில்பட்டி,
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழில் நாடக கலைக்கு என்றும் தனிச்சிறப்பு உண்டு. உழைத்து களைத்த மக்களின் ஓய்வுநேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் வளர்ந்த தெருக்கூத்து கலையானது நாளடைவில் நாடகமாகவும், சினிமா துறையாகவும் பரிணமித்தது. மக்களிடம் தெய்வ பக்தியையும், ஒழுக்கத்தையும் வளர்க்கும் வகையில், இதிகாசங்களையும், புராணங்களையும் தெருக்கூத்து மூலம் மக்களிடம் எடுத்துரைத்தனர். பின்னர் சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலை வேட்கையையும் தெருக்கூத்து மூலமாக மக்களிடம் தட்டி எழுப்பினர்.
திரைப்படத்துறையானது ஊமை படம், பேசும் படம், ஈஸ்ட்மென் கலர் படம், டிஜிட்டல் படம் என்று பல்வேறு காலகட்டங்களிலும் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது பெரும்பாலான நகரங்களில் குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் துல்லியமான ஒளி-ஒலியுடன் படம் திரையிடப்படுகிறது. திரையரங்குகளில் சொகுசு இருக்கைகளும், அலங்கார மின்விளக்குகளும் மக்களை பெரிதும் கவருகிறது. மாநகரங்களில் ஒரே வணிக வளாகத்தில் எண்ணற்ற திரையரங்குகள் அதிநவீன தொழில்நுட்பத்துடனும், காண்போர் வியக்கும் வண்ணம் கலைநயத்துடனும் அமைக்கப்பட்டு உள்ளது.
வறுமையில் வாடும் தொழிலாளர்கள்
மாதம் முழுவதும் உழைக்கும் மக்கள் தங்களது விடுமுறை நாட்களில் ஓய்வு நேரத்தில் திரையரங்குகளுக்கு குடும்பமாக செல்வது வழக்கம். தொலைக்காட்சி, கணினி, செல்போன் என்று பல்வேறு வளர்ச்சி அடைந்தாலும், திரையரங்குகளில் சென்று திரைப்படங்களை குடும்பமாக பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. திரைப்படங்களை தயாரிப்பதில் இருந்து திரையரங்குகளில் வெளியிடும் வரையிலும், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக அனைத்து திரையரங்குகளும் மூடி கிடப்பதால், அங்கு பணியாற்றிய பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து வறுமையில் வாடுகின்றனர்.
ஊரடங்கு தளர்வில், திரைப்படத்துறையினர் புதிய திரைப்படங்களுக்கான போஸ்ட் புரோடக்சன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் திரையரங்குகள் திறக்கப்படாததால், புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை உள்ளது. இதனால் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திரையரங்குகள் தற்போது மயான அமைதியுடன் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த திரையரங்கு மேலாளர் ஆனந்த் கூறியதாவது:-
சமூக இடைவெளியுடன்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதியில் இருந்து அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. இதனால் திரையரங்குகளில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்து வறுமையில் வாடுகின்றனர். எனினும் இங்கு பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கி வருகிறோம். ஊரடங்கு காலத்திலும் அவ்வப்போது திரையரங்குகளை சுத்தம் செய்து வருகிறோம். வறுமையில் வாடும் திரையரங்கு தொழிலாளர்களுக்கு அரசு நலவாரியம் அமைத்து நிவாரண உதவி வழங்க வேண்டும்.
தற்போது ஊரடங்கு சற்று தளர்வு செய்யப்பட்டதால், அனைத்து தொழில்களும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. அதேபோன்று திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதித்தால், ஒவ்வொரு காட்சி இடைவெளியிலும் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கவும், சமூக இடைவெளியை கடைபிடித்து ரசிகர்களை இருக்கைகளில் அமர வைக்கவும் ஏற்பாடு செய்வோம். மேலும் திரையரங்குகளின் நுழைவுவாயிலில் கைகழுவும் திரவம் வைக்கவும், ரசிகர்களுக்கு சூடான பானம் இலவசமாக வழங்கவும் தயாராக உள்ளோம். பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் வங்கிகளில் கடன் பெற்று, திரையரங்கத்தை புதுப்பித்துள்ளனர். எனவே, வங்கி கடன்களை திருப்பி செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story