நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தை முடிதிருத்தும் தொழிலாளர்கள் முற்றுகை
நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தை முடி திருத்தும் தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. டீக்கடைகள், பெட்டிக்கடைகள், பழக்கடைகள், ஜூஸ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் முடி திருத்தும் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள் நேற்று காலை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள், அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த சின்னத்துரை, மாரியப்பன், சுடலைமணி, இசக்கி, தங்கவேல், கணேசன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைத்து சவர தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகர் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாநகர பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முடி திருத்தும் கடைகள் உள்ளன. இந்த கடைகளை நம்பி 2 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் கடைகளை பூட்டி உள்ளோம்.
இதுவரை கடைகளை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறோம். தற்போது எங்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. பெரும்பாலான கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. முடி திருத்தும் கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
எங்களுக்கு இந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது. எனவே மாவட்ட கலெக்டர் எங்கள் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும். அரசின் விதிமுறைக்கு கட்டுப்பட்டு கடைகளை சுத்தப்படுத்தியும், முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி தெளித்தும் சுத்தமாக தொழில் செய்வோம்.
அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால், 2 மாதங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் எங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு கூட்டுறவு வங்கி மூலம் வட்டியில்லா கடன் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story