மும்பையில் இருந்து நெல்லை வந்த 22 பேருக்கு கொரோனா: தென்காசியில் 2 பேருக்கு தொற்று உறுதி
மும்பையில் இருந்து நெல்லை வந்த 22 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. தென்காசியில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து வந்த 370 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள், பெருங்குடி வடக்கன்குளம், திருமலைபுரம் அருகே உள்ள சோமநாதபேரி, நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம், மானூர், கள்ளிகுளம், மேலச்செவல் அருகே உள்ள வன்னியன்குளம், பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம், முக்கூடல் அருகே உள்ள கீழப்பாப்பாக்குடி, ஓடைமறிச்சான் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதேபோல் திருக்குறுங்குடி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் மும்பையில் இருந்து வந்த 18-க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் கிழக்கு கள்ளிகுளத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
உக்கிரன்கோட்டை பகுதியில் மும்பையில் இருந்து வந்த 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் களக்குடியை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114-ல் இருந்து 136 ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்த பெண் ஒருவர் இதய அறுவை சிகிச்சைக்காக மதுரைக்கு சென்றார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் மும்பையில் இருந்து குடும்பத்துடன் வந்தவர்களில் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் வீட்டை சுற்றி சுகாதாரப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது பாதிக்கப்பட்ட 2 பேரையும் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து உள்ளது.
வெளியூர்களில் இருந்து வருபவர்களை பரிசோதனை முடிவு தெரியும் வரை எல்லைகளில் தனிமைப்படுத்த வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான், பாறைகுளம், புதூர், வன்னிக்கோனந்தல், காவல்கிணறு, கிருஷ்ணாபுரம், சீவலப்பேரி, இட்டமொழி, பெரியதாழை, விஸ்வநாதபுரம், கொண்டைபையன்பட்டி, இடைகால் விலக்கு உள்ளிட்ட 15 இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. இதில் கங்கைகொண்டான் வழியாக ஏராளமான வாகனங்கள் வருகின்றன. அங்கு வருபவர்களுக்கு சிப்காட் பகுதியில் உள்ள எல்காட் நிறுவன வளாகத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து விடுகிறார்கள்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்கள். தொற்று உள்ளவர்கள் முன்னதாகவே நெல்லை மாவட்டத்துக்குள் வருவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டவர்கள் அனைவரையும் முடிவுகள் வரும்வரை எல்லை பகுதியிலேயே தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும். மாவட்ட எல்லைகளில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் படுக்கை வசதி ஏற்பத்தி தற்காலிக முகாம்கள் அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story