மாங்காடு அருகே, ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேருக்கு கொரோனா


மாங்காடு அருகே, ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 May 2020 10:30 PM GMT (Updated: 15 May 2020 9:52 PM GMT)

மாங்காடு அருகே ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

பூந்தமல்லி, 

மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயதான அங்கன்வாடி பெண் பணியாளர், கடந்த 9-ந் தேதி மாரடைப்பால் பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ததில், அவருடைய மகள், பேத்தி உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் உயிரிழந்த அங்கன்வாடி பெண் பணியாளரை ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குன்றத்தூர்

இதேபோல் குன்றத்தூர் மேத்தா நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்து வந்தனர். தற்போது அந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. இதனால் குன்றத்தூரில் சமூக பரவல் ஏற்பட்டு விட்டதோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுடன் குன்றத்தூர் நந்தம்பாக்கத்தில் ஒருவர் உட்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 176 ஆனது. இவர்களில் 71 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story