உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியாமல் மக்கள் திணறல்: ஊரடங்கால் உற்சாகம் இழந்த உடற்பயிற்சி கூடங்கள்
ஊரடங்கால், உடற்பயிற்சி கூடங்களில் இருந்த உற்சாகம் பறிக்கப்பட்டுள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
ஊரடங்கால், உடற்பயிற்சி கூடங்களில் இருந்த உற்சாகம் பறிக்கப்பட்டுள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.
உடற்பயிற்சி கூடங்கள்
ஒரு கட்டிடத்துக்கு அஸ்திவாரம் போல, கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல, வண்டிக்கு அச்சாணி போல, நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வுக்கு உடல்நலமே முக்கியமானதாக அமைகிறது. ஒரு காலத்தில் நாமெல்லாம் ஒவ்வொரு உணவையும் சுவையறிந்து சாப்பிட்டோம். ஆனால் இன்று சாப்பிடும் உணவில் சர்க்கரை இருக்கிறதா, என்று அறிந்து சாப்பிட வேண்டி உள்ளது. உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலை வந்து விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.
அதனால் இந்த காலக்கட்டத்தில் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை வந்து விட்டது. அதனாலேயே உடற்பயிற்சி கூடங்களும் அதிக அளவில் முளைக்க தொடங்கின. உடற்பயிற்சியாளர்களும், அதிக அளவு களத்துக்கு வந்து விட்டனர். இதனால் ஆரோக்கியத்தை பேணுவதற்கு என நேரம் ஒதுக்கி மக்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடல்நலத்தை மேம்படுத்தி வருகிறார்கள்.
ஆரோக்கியம் பேணும் இடம்
கட்டுக்கோப்பான உடல்அமைப்பு பெற வேண்டும் என வருவோர் ஒரு ரகம் என்றாலும், நோயற்ற உடல் நலத்துக்காக வருவோர் மற்றொரு ரகமாக இருக்கிறார்கள். ஆண்கள் போல பெண்களும் தற்போது உடற்பயிற்சி கூடங்களுக்கு வருகிறார்கள். தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெறுகிறார்கள். மருந்து மாத்திரைகளால் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக்கி விடுகிறார்கள். இது தவிர ஏராளமான உடற்பயிற்சி கூடங்களில் இப்போது யோகா வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவ்வாறு ஆரோக்கியம் பேணும் இடமாக உடற்பயிற்சி கூடங்கள் திகழ்கின்றன என்றால் அது மிகையல்ல.
தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எப்போதுமே பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டு இருக்கும் உடற்பயிற்சி கூடங்கள் தற்போது உற்சாகம் இழந்து கிடக்கின்றன.
அனுமதி அளிக்கவில்லை
இது குறித்து தஞ்சை நிர்மலா நகரை சேர்ந்த உடற்பயிற்சி கூட நிர்வாகி பிரபாகரன் கூறியதாவது:-
தஞ்சை மாநகரில் 20-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. இந்த உடற்பயிற்சி கூடங்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 51 நாட்களாக பூட்டியே கிடக்கின்றன. ஊரடங்கில் அரசுகள் சில தளர்வுகளை அறிவித்தாலும், உடற்பயிற்சி கூடங்களை திறக்க இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் மாதத்திற்கு ரூ.800 முதல் ரூ.1,500 வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அந்த அளவுக்கு நவீன உடற்பயிற்சி கூடங்கள் தஞ்சையில் உள்ளன. பல்வேறு உடற்பயிற்சி கூடங்கள் குளிர்சாதன வசதி கொண்டவையாகவும் உள்ளது.
நல்ல உடல் அமைப்பு என்பது தானாக கிடைக்கக்கூடியது அல்ல. அதை நாம் தான் தேடி பெற்றுக்கொள்ள வேண்டும். நலமான வாழ்க்கையை விரும்புபவர்கள் நிச்சயம் உடற்பயிற்சியை தவிர்க்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் எதிர்காலத்தை கருதி உடற்பயிற்சி கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எடை குறைப்பு, உடல் கட்டுக்கோப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைக்களுக்காக உடற்பயிற்சி கூடங்களை அணுகி உடல் நலம் பேணுகிறார்கள்.
திறக்க வேண்டும்
கொரோனா தொற்று காரணமாக உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் எங்களது வாடிக்கையாளர்களை வீடுகளில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்ய ஆன்லைன் மூலம் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். அதன்படி அவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தவித வருமானமும் கிடையாது.
அதே நேரத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்படாததால் வாடகை செலுத்த முடியாமலும், வாங்கிய கடனை கட்ட முடியாமலும் சிரமப்பட்டு வருகிறோம். பல ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர்கள், சில நாட்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருந்து மீண்டும் செய்தால் பழைய உடல்கட்டமைப்பு வந்து விடும். ஆனால் புதிதாக செய்பவர்கள் இடையில் செய்யாமல் மீண்டும் வரும் போது ஆரம்பத்தில் இருந்தே செய்ய வேண்டும். எனவே அரசுகள் உடனடியாக உடற்பயிற்சி கூடங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மொட்டை மாடிகளில்...
உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆண்களும், பெண்களும் தவித்து திணறி போகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இப்போதைய சூழலில் வீட்டின் வளாகங்கள் மற்றும் மொட்டை மாடிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுவது, எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது என இருக்கிறார்கள்.
ஊரடங்கு காரணமாக பலர் உடல் பருமனாலும் அவதிப்படுகிறார்கள். இதையெல்லாம் போக்க மீண்டும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கிறார்கள்.
Related Tags :
Next Story