பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது


பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 16 May 2020 4:46 AM IST (Updated: 16 May 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த ரியல் எஸ்டேட் அதிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர், 

திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த ரியல் எஸ்டேட் அதிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நீதிமோகன்(வயது 53). சொந்த ஊரில் வளையல் கடை நடத்தி வந்த இவர், கடந்த 2008-ம் ஆண்டு திருவாரூர் கானியாளர் தெருவில் வாடகைக்கு குடியேறினார்.

திருவாரூர் குளிக்கரை பகுதியில் இடம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கி ரூ.500, ரூ.1000 மற்றும் ரூ.2000 ஆகிய தவணை முறையில் சீட்டு நடத்தி வீட்டு மனைகளை விற்பனை செய்து வந்தார். இதில் மக்களிடம் வரவேற்பு கிடைக்க தொழிலை விரிவுபடுத்தி 29 இடங்களில் ரியல்் எஸ்டேட் நிறுவனங்களை ஆரம்பித்தார்.

கோடிக்கணக்கில் பணம் மோசடி

இந்த இடங்களில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி் 8 ஆயிரம் வீட்டு மனைகளாக மாற்றினார். மேலும் 22 பங்குதாரர்களுடன் ரியல் எஸ்டேட் அதிபரான நீதிமோகன், வீட்டு மனைகளை தவணை முறையில் விற்பனை செய்து வந்தார். திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சை, நாகை மாவட்டங்களில் 30 இடங்களுக்கு மேலாக நிலங்களை குறைவான விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளார்.

தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு முறையாக வீட்டு மனைகளை வழங்கியவர், நாளடைவில் வீட்டுமனை ஒதுக்குவதில் முறைகேடு செய்ய தொடங்கினார். மேலும் அரசின் அனுமதியின்றி முறையாக பதிவு பெறாத வீட்டு மனைகளையும் வழங்கியுள்ளார். இதை தெரிந்த வாடிக்கையாளர்கள் விவரம் அறிந்து நீதிமோகனிடம் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறி அவர் சமாளித்து வந்துள்ளார். மேலும் பலருக்கு வீட்டுமனைகளை கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்து உள்ளார்.

தேடி வந்தனர்

இதில் பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் மற்றும் திருவாரூர் டவுன்் போலீசார், மோசடி செய்த நீதிமோகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை அறிந்த ரியல் எஸ்டேட் அதிபர் நீதிமோகன் தனது குடும்பத்துடன் தலைமறைவாகினார். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படி தலைமறைவான ரியல் எஸ்டேட் அதிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடந்த 6 மாதங்களாக ரியல் எஸ்டேட் மோசடி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான நீதிமோகனை தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று நீதிமோகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான நிலம் சம்பந்தமான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த மோசடியில் நீதிமோகனுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story