வேளாண்மை சந்தை சட்ட திருத்தம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானதா? - முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம்
வேளாண்மை சந்தை சட்ட திருத்தம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக வேளாண்மை சந்தை சட்டத்தில் மாநில அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சிகள் எச்சரிக்கை விடுத் துள்ளன.
இந்த நிலையில் வேளாண்மை சந்தை சட்ட திருத்தத்திற்கு நேற்று முன்தினம் மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதை அவசர சட்டமாக கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த சட்ட திருத்தம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அதிகாரத்தை குறைக்காது
விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பது தான் எங்கள் அரசின் நோக்கம். விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்மை சந்தை சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டத்தை கொண்டு வந்து ஒப்புதல் வழங்கியுள்ளோம். இதன்படி விவசாயிகள் வேளாண்மை சந்தைகளுக்கு வெளியேயும் தங்களின் பொருட்களை விற்பனை செய்து கொள்ள முடியும்.
இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். சட்ட திருத்தம், வேளாண்மை சந்தை குழுவின் அதிகாரத்தை குறைக்காது. இந்த சந்தைகளின் நடவடிக்கைகளை வேளாண்மை சந்தை இயக்குனரகம் உன்னிப்பாக கவனிக்கும். விவசாயிகளுக்கு அநீதி ஏற்பட்டால் அந்த இயக்குனரகம் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்கும்.
சட்டத்தை நீக்கவில்லை
இந்த திருத்தப்பட்ட சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்பது தான் கர்நாடக அரசின் விருப்பம். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பது தான் மத்திய-மாநில அரசுகளின் நோக்கம்.
நாங்கள் வேளாண்மை சந்தை சட்டத்தை நீக்கவில்லை. 2 பிரிவுகளில் மட்டும் திருத்தம் செய்துள்ளோம். பல நேரங்களில் பொருட்களின் விலை குறைவால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போய்விடுகிறது. நான் விவசாயிகளின் பெயரில் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டால் இந்த முதல்-மந்திரி நாற்காலியில் ஒரு நிமிடம் கூட அமர மாட்டேன்.
நலன் பாதிக்காது
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக அவபிரசாரம் செய்கிறார்கள். தவறான தகவல்களை வெளியிட்டு விவசாயிகளை திசை திருப்புகிறார்கள். இந்த சட்ட திருத்தத்தால் விவசாயிகளின் நலன் பாதிக்காது என்று நான் உறுதி அளிக் கிறேன்.”
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story