கர்நாடகத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது


கர்நாடகத்தில் புதிய உச்சம்:  ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 16 May 2020 5:45 AM IST (Updated: 16 May 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து விமானம் மூலம் மங்களூரு வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதோடு கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நேற்று ஆயிரத்தை கடந்தது.

பெங்களூரு, 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

கொரோனாவின் கோரப்பிடி இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. தற்போது அந்த வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 951 ஆக இருந்தது. அதுபோல் இந்நோய் தொற்றுக்கு 36 பேர் உயிரிழந்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் ஒரே நாளில் அதிக பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதில் இதுதான் புதிய உச்சமாகும்.

இது தொடர்பாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

69 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பீதரை சேர்ந்த 52 வயது நபர் நேற்று மரணம் அடைந்தார். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1019 ஆக உள்ளது. நேற்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூருவில் 13 பேர், பீதரில் 7 பேர், கோலாரில் ஒருவர், சித்ரதுர்காவில் 2 பேர், சிவமொக்காவில் ஒருவர், ஹாசனில் 7 பேர், பாகல்கோட்டையில் ஒருவர், தட்சிண கன்னடாவில் 15 பேர், உத்தர கன்னடாவில் ஒருவர், உடுப்பியில் 5 பேர், கலபுரகியில் 3 பேர், மண்டியாவில் 13 பேர் ஆவர்.

கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 74 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 5,351 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் இதுவரை 480 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

துபாயில் இருந்து திரும்பிய 20 பேர்

நேற்று கொரோனா பாதிக்கப்பட்ட 69 பேர்களில் துபாயில் சிக்கி தவித்து ஊர் திரும்பிய 20 பேர் என்ற அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கடந்த 12-ந்தேதி துபாயில் இருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு சிறப்பு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் தட்சிண கன்னடா, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 40 கர்ப்பிணி பெண்கள், 2 கைக்குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் உள்பட 177 பேர் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள ஓட்டல் களில் தங்க வைக்கப் பட்டனர். மேலும் அவர்களின் ரத்தம், சளி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் தட்சிண கன்னடாவை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 11 ஆண்களும், 3 பெண்களும், 6 வயது சிறுவன் ஒருவனும் ஆவர்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த சூரத்கல்லை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சூரத்கல் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்தப்பகுதியே சீல் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 16 பேரும் மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

உடுப்பியில் 5 பேர்

துபாயில் இருந்து கடந்த 12-ந்தேதி மங்களூருவுக்கு வந்த சிறப்பு விமானத்தில் உடுப்பியை சேர்ந்த 49 பேரும் வந்திருந்தனர். அவர்கள் அரசு பஸ்கள் மூலம் உடுப்பிக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள தனியார் ஓட்டலில் தனிமையில் வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு பரிசோதனையும் செய்யப்பட்டது. அவர்களின் ரத்தம், சளி மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 3 ஆண்கள், 2 பெண்கள் ஆவர்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 5 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் உடுப்பி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story