திருச்சி மாவட்டத்தில் ‘டாஸ்மாக்’ கடைகள் இன்று திறப்பு


திருச்சி மாவட்டத்தில் ‘டாஸ்மாக்’ கடைகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 16 May 2020 6:55 AM IST (Updated: 16 May 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் ‘டாஸ்மாக்’ கடைகள் இன்று (சனிக்கிழமை) முதல் திறக்கப்படுகிறது.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் ‘டாஸ்மாக்’ கடைகள் இன்று (சனிக்கிழமை) முதல் திறக்கப்படுகிறது.

மதுக்கடை மூடல்

தமிழகத்தில் கொரோனா மிரட்டலுக்கு இடையே கடந்த 7-ந்தேதி அனைத்து மதுக்கடைகளையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்து விற்பதற்கு மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 183 கடைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள 20 மதுக்கடைகளை தவிர, 163 கடைகள் திறக்கப்பட்டது.

முதல் நாள் மதுக்கடைகள் முன்பு கட்டுக்கடங்காத மதுப்பிரியர்களின் கூட்டம் இருந்தது. திருச்சி மாவட்டத்தில் முதல் நாளில் மட்டும் ரூ.7 கோடியே 46 லட்சத்திற்கு மது விற்பனையானது. 2-வது நாள் பெரிய அளவில் வியாபாரம் ஆகவில்லை. இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அனைத்து மதுக்கடைகளும் 9-ந்தேதி முதல் மீண்டும் மூடப்பட்டன.

இன்று மீண்டும் திறப்பு

இந்த நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து ஐகோர்ட்டின் தடையை உடைத்தது. அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை தவிர இதர கடைகள் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட உள்ளது.

மதுப்பிரியர்களுக்கு தினமும் ஒரு நிறத்தில் டோக்கன் என்ற முறையில் 7 வகையான நிறங்களில் டோக்கன் வழங்கப்படுகிறது. மேலும் மதுபாட்டில்கள் வாங்க வருவோர் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், சமூக விலகலை கடைபிடிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story