பம்பரம் முத்தம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி கூடுதலாக குழாய்கள் அமைக்க கோரிக்கை


பம்பரம் முத்தம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி கூடுதலாக குழாய்கள் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2020 7:27 AM IST (Updated: 16 May 2020 7:27 AM IST)
t-max-icont-min-icon

பம்பரம் முத்தம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம், 

பம்பரம் முத்தம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கூடுதலாக குழாய்கள் அமைத்து போதிய குடிநீர் வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் பிரச்சினை

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் முத்துரங்கன்பட்டி ஊராட்சி பம்பரம் முத்தம்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த ஊராட்சிக்கு காவிரி குடிநீர் வழங்க குழாய் அமைக்கப்பட்டும், இதுவரை இந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதன் மூலம் இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த தொட்டியின் அருகே அமைக்கப்பட்டுள்ள 5 குழாய்களில் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவில் குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது.

சமூக இடைவெளி இல்லை

தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் போதிய குடிநீர் கிடைக்காத நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் நேரில் சென்று பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் தற்போது கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் முக்கியம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரே இடத்தில் 5 குழாய்கள் உள்ளதால், அப்பகுதிக்கு குடிநீர் பிடிக்க வருபவர்கள், கூட்டமாக நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை. குடிநீர் பிடிக்க வருபவர்களில் பலர் முக கவசம் அணிந்தும் வருவதில்லை. இதனால் கொரோனா பரவும் அபாய நிலை உள்ளது.

கோரிக்கை

எனவே இதனை தவிர்க்க, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அப்பகுதியில் கூடுதலாக குழாய்கள் அமைத்து, தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story